Saturday, March 26, 2011

விழிப்புணர்வு.



தன்னைப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு 
ஒழுக்கம் சார்ந்த போதனைகள் தேவையில்லை. ஏனெனில், 
விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான்.
Download As PDF

சிந்தனை துளிகள்.



ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.

"நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் 

என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" 
என்று அவர்கள் கூறினராம்.

இதைக்கேட்ட ஔவையார், "இவ்வளவுதானா, இதற்காகவா கவலை 

கொண்டுள்ளீர்கள்" என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 
4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும். 

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"


"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"


"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"

நாலு கோடிப் பாடல்கள் முற்றிற்று.
Download As PDF

"நான், எனது" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்?



"என்னுள் ஒளிரும் நிலவை என் குருட்டுக் கண்கள் அறியா.
அந்நிலவும் பகலவனும் கூட 
என்னுள்ளேயே இருந்தும்.

என்னுள் ஒலிக்கும் ஓங்காரத்தை என் செவிட்டுச் செவிகளும் கேளா."
"நான், எனது" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்?
எப்போது
"நான், எனது" என்னும் ஓசைகள் ஒடுங்குகிறதோ
அப்போது இறைவனின் வேலைகளும் ஓய்ந்துவிடும்.


ஏனெனில் இறைவனின் வேலையே நமக்கு
ஞானம் பெற்றுத் தருவதுதான்.


ஞானம் வந்தபின் நம்மிடம் அவனுக்கு வேலையுமில்லை.
மலர் மலர்வது காய்க்கத்தான்.


கபீர்.
Download As PDF

முழுதாக உரைக்க வார்த்தைகளும் இல்லை.



"எப்படிச் சொல்வேன்?"

எப்படி அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவேன்?
இறைவன் - இப்படி, அப்படியென எப்படிச் சொல்வேன்?
அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,
இப்பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவு.
அவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.

உள்ளுலகத்திற்கும் வெளியுலகத்திற்கும் இடையே
வேறுபாடுகளில்லாமல் 'ஒன்றென'ச் செய்பவன் அவன்.
அவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.
அவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.
என்ன பார்க்கிறீர்கள்?


அவனை முழுதாக உரைக்க வார்த்தைகளும் இல்லை.

                                                                 
                                                                         கபீர்தாஸ்.
Download As PDF

அறிதலற்ற நிலையிலிருந்தால் அறியலாம்.



"ஜென்" பற்றி அறிந்துகொள்ள அறிஞர் ஒருவர் ஜென் குருவிடம் சென்றார். 
அப்பொழுது குரு அவரை உபசரித்து அறிஞரிடம் கோப்பையைக் கொடுத்து, 
குரு அதில் தேநீரை ஊற்றினார்.

கோப்பை நிரம்பி வழியும் பொழுதும் குரு நிறுத்தவில்லை. அறிஞர்,

"கோப்பை நிறைந்து விட்டது. இதற்கு மேல் கொள்ளாது" என்று கூறினார். 
குருவும் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, "உங்கள் மனதில் வாதப் பிரதி 
வாதங்களும் தத்துவக் குப்பைகளும் நிரம்பியிருக்கின்றன. உங்கள் கோப்பை 
காலியாக இருந்தால்தான் ஜென் பற்றிய உணர்வு பெற முடியும்?" என்று கூறினார்.

அறிதலற்ற நிலையிலிருந்தால் அறியலாம்: நிறையச் செய்திகளைக் கற்றும் 

கேட்டும் அறிந்து மூளையில் நிறைத்து வைத்திருக்கும் அறிவாளிகளை ஜென் பொருட்படுத்துவதே இல்லை.

நிறையச் செய்திகளை அறிந்து கொண்டு சுமந்துகொண்டு அலையாமல் 

இருத்தலே நல்லது என்கிறது ஜென்.
Download As PDF

எல்லாம் நம்ம கையிலே...



தவளைக் குஞ்சின் வால் அறுந்து விழும்வரை அது நீரில் மட்டும் வசிக்கும்.
வால் விழுந்தபிறகு அது நீரிலும்,நிலத்திலும் வசிக்க முடியும்.அதுபோல 
ஒருவனிடம் அறியாமை என்னும் வால் அறுந்து விழுந்து விட்டால் 
அவன் தனிச்சைப்படி சச்சிதானந்த கடலிலும் மூழ்கலாம்,உலகத்திலும் வாழலாம்.
Download As PDF

இரண்டுவகை இன்பம்.



அழியும் உடலுடன் இரண்டற கலந்து அத்துடன் 
அழியும் அற்ப இன்பந்தான் சிற்றின்பம்.
ஆதி அந்தமிலாத இறைவனுடன் இரண்டற கலந்து 

அழிவே இல்லாத நிலையை அடையும் இன்பந்தான் பேரின்பம்.

                                                                   பட்டினத்தார்.
Download As PDF

உண்மை காதல்.



எங்கெல்லாம் உன்னை முழுமையாக இழக்கின்றாயோ 
அங்கெல்லாம் உண்மை காதல் வெளிப்படும்.
Download As PDF

அன்பே வெறுப்பை விரட்டும்.





இவ்வுலகில் வெறுப்பு வெறுப்பை விரட்டாது.
அன்பே வெறுப்பை விரட்டும்.
இதுதான் விதி.தொன்மையான 

தீர்ந்து போகாத விதி.

உண்மையான அன்பு உங்கள் உள்ளத்தின்
மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு.
அதைப் பகிர்த்து கொள்வதற்கும் பொழிவதற்கும்
காரணமே தேவையில்லை.
வேறு நோக்கமே தேவையில்லை.பகிர்ந்து
கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.
வெறுப்பு வெறுப்பை உருவாக்கி விடுவதுபோல
அன்பு அன்பையே உருவாக்கும்.

அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சுவர்கமாகும்.அன்பின் 

எல்லையற்ற அழகே அதற்கு எந்த அடிக்குறிப்பும் தேவை இல்லை
என்பதுதான். அன்பு காரணமில்லாமல் நிகழ்வது.
அது உங்களின் பரவசத்தின் வெளிப்பாடு.
உங்கள் இதயத்தின் பகிர்வு.உங்கள் இருப்பின்
பாடலைப் பகிர்ந்து கொள்வது.
உங்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது.

புத்தரின் தம்மபதம்.
Download As PDF

எது சரி? எது தவறு?



ஒரு ஜென் துறவிக்கு நிறைய சீடர்கள் இருந்தனர்.

ஒரு சீடன் திருடும் போது பிடிபட்டுக் கொண்டான். அவனை உடனே வெளியனுப்புமாறு மற்ற சீடர்கள் கேட்டுக் கொண்டனர். துறவியோ கண்டுகொள்ளவே இல்லை.

மீண்டும் ஒரு முறை அவன் திருடும் போது பிடிபட்டான். அப்போதும் துறவி 

அதைக் கண்டுகொள்ளவில்லை.

உடனே மற்ற சீடர்கள் அனைவரும் ஒரு மனு எழுதி அச்சீடனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறப்போவதாக எழுதி அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர்.

அதைப் படித்த துறவி அன்பு கனிந்த குரலில் கீழ்க்கண்டவாறு கூறினாராம்:

"சீடர்களே நீங்கள் அனைவரும் எத்துணை புத்திசாலிகள் என்பதை நினைத்துப் பெருமையடைகிறேன். உங்களால் எது சரி என்றும் எது தவறு என்றும் அறிய முடிகிறதே! நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த சீடருக்கு என்னைத் தவிர வேறு யார் எது சரி என்றும் எது தவறு என்றும் எவ்வாறு தவறுகளில் இருந்து சரியாகப் பயில வேண்டும் என்பதையும் சொல்லித் தருவார்கள்?"

அப்போது அந்த சீடர் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழிந்ததுடன் 

அதன் பிறகு அவர் திருடவேயில்லை.

அந்த ஜப்பானிய ஜென் துறவியின் பெயர் பேங்கீய் ஆகும்
Download As PDF

கடந்த ஒன்றைத் தேடுவதுதான்.



ஆன்மீக வழியைத் தேடுவது என்றால் ஐம்புலன்களின் 
எல்லையும் அனுபவத்தையும் கடந்த ஒன்றைத் தேடுவதுதான்.
Download As PDF

சிறந்த வீரன்





தன்னைவிட ஆயிரம் மடங்கு வலிமை மிக்க ஆயிரம் 
பகைவர்களை வென்றும்,உணர்ச்சிகளுக்கு அடிமையாக 
இருப்பவனைவிட,தன்னை வென்றவனே சிறந்த வீரன்.
Download As PDF

ஆனந்தம்.



சுயநலத்தை அறவே வென்றவன் ஆனந்தமாக இருப்பான்.
அமைதியை அடைந்தவன் ஆனந்தமாக இருப்பான்.
உண்மையை உணர்ந்தவன் ஆனந்தமாக இருப்பான்.
Download As PDF

ஆசையே துன்பத்திற்கு காரணம்.



புத்தர் தனது இளமையில் கண்ட
மரணம், பிணி,மூப்பு இவை அனைத்தும்
எல்லா மனிதருக்கும் வரும் என்பதை அறிந்த பின்னரே
இவ்வுலக வாழ்வை துறந்து அவற்றின் விடையை காண ஓடினார்.

அவர் காலத்திலும் கடவுளை
அடைய வழிகள் பல இருந்தன.
எல்லாவற்றையும் துறந்து காட்டுக்கு ஓடுவது,
ஒருவேளை உண்பது, உண்ணாமல் இருப்பது,
மூச்சை இழுத்து விடுவது,கண்ணை மூடி பார்ப்பது,
பேசாமல் இருப்பது,தலை கீழாக நிற்பது,
வேதங்களை கற்பது இவை எல்லாவற்றையும்
செய்து செய்து உடலும்,மனமும் தளர்ந்து
போனதுதான் மிச்சம்.

காண வந்த விடை கிடைக்கவில்லை.
விரக்கியின் எல்லையில் எல்லாவற்றையும் கைவிட்டு
சோர்ந்து மரத்தின் கீழ் படுத்திருந்தார்.
எதுவும் செய்ய வேண்டிய நிலை இல்லாதபோது
மனமற்ற நிலையில் தன் உண்மையை உணர்ந்தார்.
இதை அடைய எடுத்த முயற்சிகள் அனைத்தும்
ஆசையின் உந்துதலே என்பதையும்,முயற்சி உள்ளவரை
மனமும் இருக்கும் என்பதையும் உணர்ந்தார்.

உண்மை எப்பொழுதும் உள்ளது.அது புதிதாக கண்டுபிடிப்பதன்று.இருப்பதை 

மறைப்பது மனமே. உண்மையை அடைய எடுக்கும் முயற்சியே அதை அடைய
தடை என்பதையே "ஆசை துன்பத்திற்கு காரணம்" என்று உணர்ந்து கூறினார்.

இதையே தாயுமானவனும் "சிந்தையை அடக்கி சும்மா இருப்பது அரிது"

என்றுரைகின்றார்.
Download As PDF

அது செய்தி.



பத்திரிக்கைகாரர்கள்,பத்திரிகை,மற்றும் வேறு ஊடகங்களும்
எதிர்மறை நிகழ்வுகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.
தவறு ஏதும் செய்யாதவரை யாரும் செய்திகளில் பேசப்படுவதில்லை.

பெர்னார்ட் ஷா சொல்லுவார்,"மனிதன் நாயைக் கடித்து விட்டால் அது செய்தி.

நாய் மனிதனை கடிப்பது செய்தியல்ல,"என்று.

நம்ப முடியாது எனும்போது தான் ஒன்று செய்தியாகிறது.
கண்களை உறுத்துவதாக இருப்பதுதான் செய்தியாகிறது.

ஆயிரத்தொரு காரியங்களைச் செய்து திரிந்து கொண்டிருந்தாலும் யாரும் 

கவலைபடப் போவதில்லை.எதோ ஒரு தவறைச் செய்து பார்.இந்த உலகம் 
முழுவதும் உன்னை பார்க்க ஆரம்பித்துவிடும்.
Download As PDF

அறிவே தெய்வம்

அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.
Download As PDF

கவனமாகயிருக்க வேண்டும்.



ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன் அதனுள் விழுந்து 
விடாமலிருப்பதற்காக கவனமாக இருப்பதைப் போல் உலகத்தின் 
ஆசாபாசங்களில் விழாமல் கவனமாகயிருக்க வேண்டும்.விழுந்து 
விட்டால் காயப்படாமலும் அழுக்குப் படாமலும் வெளிவருவது அசாத்தியம்.

Download As PDF

ஒப்பீடு செய்வதல்ல வாழ்க்கை.



இங்கே வாழும் ஒவ்வொரு மனிதனும்
தனித்தன்மை வாய்ந்தவன்.
பிறரோடு ஒப்பிட முடியாதவன்.
ஒவ்வொருவருக்கும் உரிய வாழ்க்கையை
இயற்கை அவர்களுக்கே உரிய சந்தர்ப்பங்களோடு
படைத்திருக்கிறது.

சந்தர்ப்பங்கள் உங்களை பக்குவபடுத்துவதற்கே
வழங்கப்பட்டுள்ளது என்பதை உணர்வதே
அந்த இயற்கையை புரிந்துகொள்ளுதல் ஆகும்.
அடுத்தவரோடு 
ஒப்பீடு செய்வதல்ல வாழ்க்கை.
Download As PDF

ஆனந்தத்தை தேடி....



ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் ஊர் எல்லையில் வசித்து வந்தான்.
போவோர் வருவோர் அனைவரிடமும் பிச்சை கேட்டு நச்சரித்து வாழ்ந்து வந்தான்.
ஒரு சமயம் திடீரென இறந்து போனான்.


ஊர்காரர்கள் ஒன்றுகூடி அவனை அவன் வாழ்ந்து வந்த மரத்தின் கீழ் புதைப்பதென 
முடிவு செய்து தோண்டினர்.அப்போது அந்த மரத்தின் கீழ் மூன்று பானைகளில் 
தலா ஆயிரம் பொற்காசுகள் வீதம் இருந்தது.பாவம்! அந்த பிச்சைக்காரன் தன் 
காலடியின் கிழே இருந்த பொக்கிஷத்தை அறியாமல் இப்படி பிச்சை எடுத்ததை 
எண்ணி வருந்தினர்.

இதை போன்றே நாம் அனைவரும் ஆனந்தத்தை தேடி இந்த உலகத்தின் 

மூலைமுடுக்கெல்லாம் தேடி அலைகிறோம்.ஆனால் அது அவரவர் 
உள்ளதிலேயே இருப்பதை அறியாமல் அந்த பிச்சைக்காரனை 
போல் தவிக்கின்றோம்
Download As PDF

நம்பிக்கையில் நான் நம்பிக்கை கொள்வதில்லை.



நம்பிக்கையில் நான் நம்பிக்கை கொள்வதில்லை.

அறிதல் தான் எனது அணுகுமுறை.மேலும்
அறிதல் என்பது முற்றிலும் வேறுப்பட்ட ஒரு பரிமாணம்.
அது சந்தேகிப்பதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
அது நம்பிக்கை கொள்வதிலிருந்து ஆரம்பிப்பதில்லை.
ஏதோ ஒன்றினை நம்பி விடுகின்ற அந்த நொடிப்
பொழுதே நீங்கள் விசாரிப்பதை நிறுத்தி விடுகிறீர்கள்.
மனிதனின் புத்திசாலிதனத்தை அழிப்பதில் இந்த
நம்பிக்கை என்பது மிகவும் விஷம் நிறைந்த ஒன்றாகும்.

எல்லா மதங்களும்,நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டுதான் இருக்கின்றன.விஞ்ஞானம் மட்டுமே
சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஆனால் மதம் சார்ந்த விசாரணை கூட விஞ்ஞானப் பூர்வமானதாகவும்,

சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் 
என்று நான் விரும்புகின்றேன்.

அப்போதுதான் நமது இருப்புணர்வின் உண்மையையும்,இந்த முழு 

பிரபஞ்சத்தின் உண்மையையும் நம்பிக்கை கொள்ள வேண்டிய 
அவசியம் இல்லாமலேயே என்றாவது ஒருநாள் நாம் அறிந்து கொள்ளமுடியும்.
Download As PDF

எல்லா தளைகளுக்கும் முக்கியக் காரணம் அறியாமை.



எல்லா தளைகளுக்கும் முக்கியக் காரணம் அறியாமை. 

மனிதன் இயல்பில் கொடியவன் அல்லன்.அவன் இயல்பிலேயே தூயவன்,

முற்றிலும் புனிதமானவன்.ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவான்.
நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே கடவுள்தான்.

இந்த இயல்பு அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறியாமையே நம்மைக் கட்டுண்டவர்களாக ஆக்கியிருக்கிறது.
எல்லா துன்பங்களுக்கும் அறியாமையே காரணம்.
எல்லா கொடுமைகளுக்கும் அறியாமையே காரணம்.

அறிவு,உலகை நல்லதாக்குகிறது.அறிவு எல்லா துன்பங்களையும் ஒழிக்கிறது.

அறிவு நம்மைச் சுதந்திரர்களாக்குகிறது.உண்மைஅறிவின் கருத்து இதுவே.
அறிவு நம்மைச் சுதந்திரர்களாக்குகிறது!

எந்த அறிவு? வேதியலா?இயற்பியலா?வான இயலா?பூமியியலா? 

அவை எல்லாம் சிறிது உதவுகிறது.மிக சிறிதளவே உதவுகின்றன.
ஆனால் முக்கியமான அறிவு என்பது உங்கள் இயல்பே."உன்னை அறிந்து கொள்.

"நீங்கள் உண்மையில் யார்?உங்கள் உண்மை இயல்பு எது என்பதை அறிந்துக் கொள்ளவேண்டும்.அந்த எல்லையற்ற இயல்பை உங்களுக்குள் உணரவேண்டும்.

இந்த ஆன்மாவை(உண்மை இயல்பை) அறிய பல்வேறு வழிகள் உள்ளன.

பகுத்தறிவுபூர்வமான ஆராய்ச்சி மட்டுமே,பகுத்தறிவு மட்டுமே ஆன்மீக 
உணர்வு நிலைக்கு உயர்ந்து,நாம் யார் என்பதை நமக்கு காட்டுகிறது.

இங்கே வெறுமனே நம்புவது என்ற பேச்சிற்கே இடம் இல்லை.எதையும் 

நம்பாதீர்கள்-ஞானியின் கருத்து இதுவே.

எதையும் நம்பாதீர்கள்,ஒவ்வொன்றையும் நம்புவதிலிருந்து விடுபடுங்கள்.

இதுவே முதற்படி.அறிவுபூர்வமானவராக இருக்க துணிவு கொள்ளுங்கள்.
விவேகம் எங்கே அழைத்துச் சென்றாலும் அங்கு செல்ல துணிவுக் கொள்ளுங்கள்.
Download As PDF

இருக்கும் நினைவுடன் வாழக் கற்றுக்கொள்



தெளிந்த அறிவில் உணர்ந்து 
சாற்றுவதெல்லாம் தத்துவங்களாம்.
இருக்கும் காலத்தில் கடந்த நினைவுகளோடு
பிதற்றுவதெல்லாம் கவிதைகளாம்.
இருக்கும் நினைவுடன் வாழக் கற்றுக்கொள்
என்றால் கசக்கிறதாம்.
இறந்த நினைவுகளோடு வாழ்வை தொலைப்பது
என்றால் இனிகிறதாம்.
Download As PDF

உண்மையான ஏகாந்தம்.



உடல்,புலன்கள்,மனம்,புத்தி இவற்றுடன் தான் தொடர்பு கொள்ளாதிருப்பதே 
உண்மையான ஏகாந்தம்.

உடலும் உலகின் ஒரு கூறுதான்.ஆகவே உடலின் தொடர்பை நீக்குவது தான்-

அதாவது நான்,எனது என்ற வாசனைகள் அழிவதுதான் உண்மையான ஏகாந்தம்.

ஜனங்கள் அற்ற இடத்திற்கு செல்வதும்,தனித்து இருப்பதும் ஏகாந்தம் என்று 

கருதுவது பெரும் பிழையாம்.ஏனெனில் சம்சாரம் முழுமைக்குமான விதையாகிய 
உடலோ கூடவே இருக்கிறது.
Download As PDF

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்





சங்கநிதி,பதுமநிதி என்ற வார்த்தைகள் தமிழில்
எண்ணளவையை சார்ந்தது என்பது தெரியும்.ஆனால்
எவ்வளவு என்பதை காண இதை பார்க்கவும்.

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?!
10000000000000000000 = பரார்த்தம் —?!!
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி !!!
10000000000000000000000 = மஹாயுகம் -?!!!!
Download As PDF

தமிழ் எண்கள்.




கோடிகோடி என்பதனை தமிழ் எண்களால் 
எப்படி எழுதுவது என்பதுதெரியுமா? 
௱௱௲௱௱௲. 
நம்பமுடிகிறதா உங்களால்?.


தமிழ் எண்கள்.

* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
Download As PDF

உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 .





இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.

இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
கிரேக்க மொழி
சமஸ்கிருதம்
இலத்தீன்

பாரசீக மொழி
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
அரபு மொழி
எபிரேயம்

திராவிட மொழிகள்:
தமிழ்
சினோ-திபெத்திய மொழிகள்:
சீன மொழி.

செம்மொழித் தகுதி

ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கிறது.

1. இலக்கியப் படைப்புகள்.
2. கலைப் படைப்புகள்.

இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன.
Download As PDF

தமிழ் எண்களுக்குரிய பெயர்கள் எப்படி தோன்றிருக்கலாம் என்பதற்குரிய விளக்கம்.



தமிழ் எண்களுக்குரிய பெயர்கள் எப்படி தோன்றிருக்கலாம் என்பதற்குரிய விளக்கம்.

ஒன்று
ஒல் - ஒன் - ஒன்று - ஒல்லுதல் -பொருந்துதல்
ஒன்று சேர்தல் என்பதால் "ஒன்று" என்றானது.
ஒல் ஓர் ஒரு (பெயரெச்சம்)

இரண்டு
ஈர் - இர் - இரது - இரண்டு - ஈர்தல் - ஒன்றை இரண்டாக அறுத்தல்
ஈர், இர், இரு (பெயரெச்சம்)

மூன்று
முப்பட்டையான மூக்கின் பெயரினின்று தோன்றியிருக்கலாம்.
மூசு - மூகு மூ (மூது) மூறு - மூன்று
மூ (பெயரெச்சம்)

நான்கு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்கிற நால்வகை நிலத்தொகைப் பிறப்பு, ஞாலம் நானிலம் எனப்படுதல் காண்க.
நால் - நால்கு - நான்கு
நால் - நான்கு
நால் (பெயரெச்சம்)

ஐந்து
கை - ஐ (ஐது) - ஐந்து - அஞ்சு
கை = ஐந்து, கையில் ஐந்து விரல்களிருப்பதால் ஐந்தென்னும் எண்ணைக் குறித்தது. வறட்டி விற்கும் பெண்டிர் ஒவ்வொரு ஐந்தையும் ஒவ்வொரு கை என்பர், கை எனும் சொல்லின் மெய் நீக்கமே ஐ.
கை - ஐ (பெயரெச்சம்)

ஆறு
ஆறு = வழி, நெறி மதம், பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறு தெய்வ வணக்கமும், கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் இருந்ததினால் ஆறென்னும் மதப் பெயர் ஆறென்னும் எண்ணைக் குறிக்கலாயிற்று.
ஆறு - அறு (பெயரெச்சம்)

ஏழு
எழு - எழுவு, எழுவுதல் இசைக் கருவியினின்று ஒலியெழச் செய்தல், இன்னிசை ஏழாதலால் அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப் பெயர் தோன்றிற்று.
எழு ஏழ் ஏழு
எழு (பெயரெச்சம்)

எட்டு
தமிழில் எல்லை என்னுஞ் சொல் இடவரம்பையும் திசையையும் குறிக்கும். எல்லை என்பதற்கு ஒரு பொருள் மறுசொல் எண் என்பதாம். நேர்த்திசை நான்கும், கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின் திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டு எனும் எண்ணுப் பெயரைத் தோற்றுவித்தது.
எண் - எட்டு
எண் (பெயரெச்சம்)

தொண்டு(ஒன்பது)
தொள் - தொண்டு = தொளை.
தொண்டு - தொண்டி = தொளை.
மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருந்தால் தொளைப் பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. தொண்டு வழக்கற அஃதிருந்த இடத்திற்குத் தொண்பது (90) தொன்பதாகி ஒன்பதாகியது

பத்து
பல் = பல
பல் - பது - பத்து - பஃது

நூறு
நுறு - நூறு = பொடி,
நுறு - நுறுங்கு - நொறுங்கு
நூறு (பொடி) எண்ண முடியாதிருப்பதால் அதன் முடியாதிருப்பதால் அதன் முதற் பெருந்தொகையைக் குறித்தது.
நூறு -நீறு
ஆயிரம்
அயிர்- நுண் மணல்
அயிர் அயிரம் ஆயிரம்
ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாய் இருப்பதால் மணற்பெயரும் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.

கோடி
குடி - குடுமி = உச்சி, தலையுச்சி, ஆடவர் தலை மயிர்க்கற்றை, பறவைச்சூட்டு, மகுடம், மாடவுச்சி, மலையுச்சி, நுனி, குடு - கொடு,
கொடுமுடி - மலையுச்சி,
கொடு - கோடி = நுனிமுனை, கடைசி, எல்லை, முடிமாலை
கோடம் = எல்லை, கடைக் கோடி எனும் வழக்கை நோக்குக. தெருக்கோடி, விற்கோடி என்பனவும் முனையைக் குறித்தல் காண்க.
கோடகம் - முடிவகை
கோடி கடைசி எண்ணாதலால் அப்பெயர் கொண்டது.

தேவநேயப் பாவாணர் எழுதிய “தமிழ் வரலாறு” எனும் நூலில்
ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் மற்றும் நூறு, ஆயிரம், கோடி ஆகியவைகளுக்கும் விளக்கமளித்துள்ளார்.
Download As PDF

நிலஅளவைகள்



காணி நிலம் வேண்டும்,பராசக்தி!
காணி நிலம் வேண்டும்... ?



தமிழ்க் கணிதம்.

15/16(0.9375)= முக்காலே மூன்று வீசம்
3/4(0.75)= முக்கால்
1/2(0.5)= அரை
1/4(0.25)= கால்
1/5(0.2)= நால்மா/நான்மா
3/16(0.1875)= மூன்று வீசம்
3/20(0.15)= மூன்றுமா
1/8(0.125)= அரைக்கால்
1/10(0.1)= இருமா
1/16(0.0625)= வீசம்
1/20(0.05)= மா
3/64(0.046875)= முக்கால் வீசம்
3/80(0.0375)= முக்காணி
1/32(0.03125)= அரை வீசம்
1/40(0.025)= அரை மா
1/64(0.015625)= கால் வீசம்
1/80(0.0125)= காணி
3/320(0.009375)= அரைக்காணி முந்திரி
1/160(0.00625)= அரைக் காணி
1/320(0.003125)= முந்திரி
3/1280(0.00234375)= கீழ் முக்கால்
1/640(0.0015625)= கீழ் அரை
1/1280(0.00078125)= கீழ்க் கால்
1/1600(0.000625)= கீழ் நால்மா
3/5020(0.000597609)= கீழ் மூன்று வீசம்
1/2560(0.000390625)= கீழ் அரைக்கால்
1/3200(0.0003125)= கீழ் இருமா
1/5120(0.000195312)= கீழ் மாகாணி
1/6400(0.00015625)= கீழ் மா
3/25600(0.000117187)= கீழ் முக்காணி
1/12800(0.000078125)= கீழ் அரைமா
1/25600(0.000039062)= கீழ்க்காணி
1/51200(0.000019531)= கீழ் அரைக்காணி
1/102400(0.000009765)= கீழ் முந்திரி}
Download As PDF

பெய்தல் அளவு:


300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.
Download As PDF

ஆய கலைகள் அறுபத்து நான்காவது



ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உண்ர்விக்கும் என்னம்மை தூய
உருப்பளிங்கு போல் வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள இங்கு வாராது இடர்!

அறுபத்து நன்கு கலைகளை அனைத்தையும்
ஒருசேர உணர்விக்கும் கலைகளின் பிறப்பிடமானவளின்
உண்மை சொரூபமானது நிறமற்ற பளிங்குபோல் தூய உணர்வானது என் உள்ளத்துளே இருப்பதால் இன்னல்
என்பது இங்கு தோன்றுவதற்கு வழியில்லை.

ஆய கலைகள் அறுபத்து நான்காவது:

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

Download As PDF

"செய்பவன் நானல்ல"





"செய்பவன் நான்" என்ற எண்ணமே ஒரு கொடும்பாம்பின் விஷத்திற்கு ஒப்பானது.
உண்மையான ஞானம் என்பது இங்கு "செய்பவன் நானல்ல" என்று உணர்ந்து கொள்வதே.

மூச்சு,இருதயம்,செரிமானம் போன்றவற்றின் செயல்கள் எல்லாம் உயிரை 

ஆதாரமாக கொண்டு, செய்பவன் இன்றி செயலாவது போல் நீயும் அதே 
உண்மையின் ஆதாரத்தில் உன்னை (நான் செய்கிறேன் என்ற அபிமானத்தை) 
இழந்து செயலை மட்டும் செய்து கொண்டு ஆனந்தமாய் இரு!

ஆனந்தம்=சுகதுக்கமற்ற நிலை.
Download As PDF

மூடத்தனத்தை வளர்க்க கூடாது.



28 வருடங்களுக்கு முன் நான் காரைக்காலில் படித்துகொண்டிருந்த சமயம் அது.
காரைக்காலுக்கு பக்கத்தில் திருநள்ளாரில் குடும்பசகிதமாக சனி பெயர்ச்சிக்கு 
அதிகாலை 4.30 மணியளவில் சென்றிந்தோம்.

வேட்டு சத்தம் கேட்டதும் அனைவரும் அந்த குளத்தில் குளித்துவிட்டு 

பெயருக்கு ஒரு துணிவீதம் விட்டு செல்வது வழக்கம். அவ்வாறே வழக்கம் போல் 
எல்லாம் நடந்தது.

வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டு நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து 

அந்த குளத்தை காண்பதற்கு சென்றோம்.காலையில் பரபரப்பாக இருந்த இடம் 
வெறிசொடிப் போய் இருந்தது.ஆட்கள் ஒருவரும் இல்லை.குளத்தில் உள்ள 
மீன்கள் அனைத்தும் எண்ணைகலந்த நீரில் செத்து மிதந்தன.இன்னும் அந்த 
காட்சிகள் பசுமரத்தாணிபோல் மனதில் உள்ளது.

ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சனியின் கோயிலை அப்போது 

சீண்டுவதற்கு யாரும் இல்லை.அதே கோவில் தற்சமயம் திருப்பதி அளவிற்கு 
வளர்ந்துள்ளதை பார்க்கும்போது மிகவும் வேடிக்கையாக உள்ளது.அந்த அளவிற்கு 
மக்களுக்கு சனியின் மீது பயம் வளர்ந்துள்ளது.

ஆன்மிகம் என்ற பெயரில் இந்தமாதிரி மூடத்தனத்தை வளர்க்க கூடாது.இது 

போன்றே தஞ்சை பெரியகோயில் நந்தி வழிபாடும்...ராஜராஜன் விரும்பிய 
சமயம் வளரவில்லை.மாறாக வேறு ஏதேதோ நடந்தேறுகிறது.
Download As PDF

பதம் முக்கியம்.



தன்ன தென்றுரை சாற்று வனவெலாம்
நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன்
இன்னம் என்னை யிடருறக் கூட்டினால்
பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே.
                                         தாயுமானவர்.

என்னுடையவை என்று சொல்லும் பொருள் அனைத்தையும்
உன்னுடையவை என்றுணர்ந்து உன்னிடத்தே தந்தேன்.
இன்னும் எனக்கு சோதனையை கூட்டினால்
உய்ய வேறு வழியறியாது இந்த பேதை உயிர் உழலுமே!

சமயம் என்பதற்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள்.
சாதத்தை பக்குவத்திற்கு மேல் சமைத்தாலும் குழைந்துவிடும்.
பக்குவத்திற்கு முன் வடித்தாலும் அரைவேக்காடு ஆகிவிடும்.
ஆக பதம் முக்கியம்.

இறைவனே!அடியனை அதிக சோதனைக்கு ஆட்படுத்தி 

குழைத்துவிட்டால் வேறு வகையறியேன் என்பது பொருள்.
Download As PDF

இதுதான் இயற்கை.

ஒருவர் ஒரு புதிய வீட்டை கட்டினார்.நம் கலாச்சாரத்தில் புதிய வீடு கட்டினால் ஒரு புனிதரையோ,பெரியவரையோ அழைத்து வீட்டினை ஆசீர்வதிக்க செய்வார்கள்.

அவரும் ஒரு துறவியை அழைத்து வந்து,அவருக்கு ராஜமரியாதையுடன் 

வரவேற்று,உபசரித்து, விருந்தளித்தார்.

பின்பு அவர் குடும்பத்தினரையும்,அவர் வீட்டையும் ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்க்கு அந்த துறவி,"முதலில் உங்கள் தந்தை இறக்கட்டும்,பின்பு நீங்களும்,அதன் பின்பு உங்கள் குழந்தைகளும் இறக்கட்டும்" என்று கூறினார்.

அதை கேட்ட அந்த மனிதனுக்கு கடுமையான கோபம் வந்தது."முட்டாளே,நாங்கள் உன்னை வீட்டிற்கு அழைத்து வந்து,அரசரை போல் உபசரித்து,

விருந்தளித்து,பரிசுகள் கொடுத்து எங்களை ஆசிர்வதிக்க சொன்னால்,என் தந்தை முதலிலும்,பின்பு நானும்,என் குழந்தைகளும் இறக்கவேண்டும் என்று கூறுகிறாயே"

என்று கடிந்து கொண்டார்.மேலும் துறவி இப்படி கூறியதால்,அப்படியே நிகழ்ந்து விடுமோ என்று பயம் கொண்டார்.

அதற்கு அந்த துறவி,நான் கூறியதில் தவறில்லை.முதலில் தந்தையும்,பின்பு தங்களும்,அதன்பின்பு உங்கள் குழந்தைகளும் இறப்பதுதான் நல்லது.

நீங்கள் உங்கள் தந்தைக்கு முன் இறந்தாலோ அல்லது உங்களின் குழந்தைகள் 

உங்களுக்கு முன் இறந்தாலோ,நல்லதல்ல.எனவே முதலில் உங்கள் தந்தையும் 
பின்பு நீங்களும்,அதன் பின்பு உங்கள் குழந்தைகளும் இறக்கவேண்டும். இதுதான் இயற்கை.இப்படித்தான் வாழ்க்கை நடக்க வேண்டும்.

சிலவேளைகளில் புரிதல்கள் இப்படித்தான் தவறான அர்த்தத்தை தந்துவிடும்.

யதார்த்தத்தை தொலைத்துவிடும்.
Download As PDF

தன்னில் விளங்கும் ஞானத்தை அறிவதே.





கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்.


மனிதன் கல்வியினால் அடையத்தக்க பெரும்பயன் என்னவெனில் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ள வாலறிவாய் விளங்கும் பேரறிவை தன்னுள்ளும் உணர்வதே மனிதன் தான் கற்ற கல்வியினால் அடைகின்ற பெரும்பயனாகும்.

கேள்வி, ஊறு,ஒளி,சுவை,நாற்றம் என்ற புலன்களை
கொண்டு காது,தோல்,கண்,நாக்கு,மூக்கு என்ற பொறி வழியே
ஓசை/சப்தம்,-தட்ப/வெட்பம்,கடினம்/மேன்மை,-காட்சி-அறுசுவை,
நாற்றம்/துர்நாற்றம் ஆகியவற்றின் தொகுப்பாகியஇவ்வுலகத்தை விருப்பு,வெறுப்பை தோற்றுவிக்கும் மனதை கொண்டு அனுபவிப்பவன் 
நான் என்னும் அகங்காரத்தை சித்தப்படுத்தி தெளிவற்ற புத்தியால் 
காணப்படும் இவ்வுடலே நான் என்னும் நினைவில் வாழும் மனிதர்களே!

இவ்வைந்து அறிவிற்கும் ஆதாரமாய் மேலும் உள்ளும் புறமும் 
நிறைந்து விளங்குவதே வாலறிவு எனப்படும்.

பார்வை என்ற புலனை கொண்டு கண் வழியே காட்சியாகிய
உலகை காணலாம்.ஆனால் பார்வைக்கு ஆதாரமாய் விளங்கும் அறிவை 
அந்த பார்வையை கொண்டு அறிய இயலாது.

பார்வை என்ற அறிவையே காட்சியை கொண்டுதான் உணரமுடியும்.
இப்படி எல்லா அறிவுக்கும் ஆதாரமாய் விளங்கும் மூலமே வாலறிவாகும்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும். 214

இங்கணம் அனைத்தும் தன்மயமாய் விளங்கும் அறிவை உணர்வதால் நன்றியுணர்வு தோன்றும்.அதுவே தொழுதல்.

ஆக கல்வியின் பயனே தன்னில் விளங்கும் ஞானத்தை அறிவதே.
Download As PDF


முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே!
                             

                                                                             பட்டினத்தார்
Download As PDF

சுழலுக்கு நிகரானது இவ்வுலகம்.




போகத்திலேயே மக்கள் கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். 
ஆனால் போகமோ துன்பம் மிக நிறைந்ததாக இருக்கிறது. 
நதிப்பிரவாகத்திலிருக்கும் சுழலுக்கு நிகரானது இவ்வுலகம். 
அச்சுழலுக்குள் படகு ஒன்று அகப்பட்டுக் கொண்டால் அது 
தப்பித்து வெளியே வரமுடியாது. இவ்வுலகில் அகப்பட்டுக் 
கொள்கிறவர்களின் கதியும் இப்படியே.

Download As PDF

"சிந்தையை அடக்கி சும்மாவிருக்கும்'"திறமே ஜீவன்முக்தி.





தன் முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற தூய உணர்வே நமது உண்மையான இயல்பு. அந்த நிலைமை நாம் உணர்ந்து அவ்வனுபவத்தில் ஒன்றிவிடுவோமானால் அது சரியே.

ஆயினும், ஒருவர் அந்நிலையை முயற்சி ஏதுமின்றி அடைவதற்கில்லை. அத்தகைய முயற்சியை முனைந்து மேற்கொள்வதே தியானம் எனப்படுவது.

ஜென்மாந்திர வாசனைகள் அனைத்தும் மனதை வெளிமுகமாய்ப் புறப் பொருள்கள் மீதே திருப்புகின்றன. அவ்வாறான எண்ணங்கள் யாவற்றையும் துறந்து, மனதை உள்முகமாகத் திருப்ப வேண்டும். இந்த அகமுக நாட்டத்திற்கு அநேகமாக எல்லோருக்குமே சுய முயற்சி தேவைப்படுகிறது. 'சிந்தையை அடக்கிச் சும்மா இரு' என்பதே சாதகர்களுக்கு எந்த ஒரு ஞானியின், எந்த ஒரு ஆன்மீக நூலின் போதனையாக அமைகிறது.

ஆனால் 'சும்மா இருத்தல்' அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆகவேதான் அதற்கு முயற்சி அவசியப்படுகிறது.முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற, பேரின்ப நிலையாம் தூய உணர்வைத் துய்க்க விடாமுயற்சி அவசியம்.

'சிந்தையை அடக்கி சும்மாவிருக்கும்' திறமே ஜீவன்முக்தி.
ஆயினும் இந்த உண்மையை எவ்வளவுதான் நீர் உமது மனத்திற்கு எடுத்துரைத்தாலும் சிந்தை சும்மா இருப்பதில்லை. ஏனெனில் மனம்தானே மனத்திற்கு அவ்வாறு கூறுகிறது! அந்த மனத்திற்கு அவ்வாறு அடங்கிவிடும் திறமோ அரிதினும் அரிது.

மன நாசத்தையே சாத்திரங்கள் அனைத்தும் இயம்பியுள்ன. இதனையே சான்றோர்கள் திரும்பத் திரும்பத் கூறுவதை நாள்தோறும் கேட்கிறோம்.

மாயா உலகத்திலும், புலன்கள் உணர்த்தும் புறப் பொருட்கள் மீதும் மனத்தை மேய விட்டுவிடுகிறோம். இதன் காரணமாகவே முயற்சிகளற்ற பூரண சாந்தி நிலை எய்துவதற்கு நெஞ்சறிய, ஆன்மார்த்த அபார முயற்சி அவசியமாகிறது.

முயற்சி செய்யலாமல் உங்களால் வெறுமனே இருப்பது சாத்தியமே அல்ல. அவ்வாறு முயன்று மேன்மேலும் உள்ளாழ்ந்து ஆன்ம நிலைபேறு எய்தபின் முயற்சி ஏதும் செய்வதும் சாத்தியமே அல்ல.
Download As PDF

மனித உடலில்தான் தன்னை அறியும் அறிவு உள்ளது.




நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

ஒவ்வொரு ஜீவனும் அறியாமையாகிய இருளிலிருந்து
தன்னை விடுவிக்க பிறவிவேண்டி இறைவனிடம் மன்றாடி
தாயின் கருவில் பத்துமாதம் இருந்து நந்தவனமாகிய இந்த பூஉலகில் 

உடலுடன் பிறக்கிறது.இந்த அறிய மனித உடலில்தான் தன்னை 
அறியும் அறிவு உள்ளது.

உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்.............
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்"

ஆனால் பெற்ற பெரும்பயனை மறந்து தன்னை "உடலாக" 

அபிமானம் கொள்கிறான்.இதுவே அஞ்ஞானம்.

"நான்","எனது" என்ற அபிமானத்தால் மனிதன் தன்னை இழந்துவிடுகிறான்.

இதுவே இப்பாடலின் பொருள்.
Download As PDF