உங்களின் இருப்பை இப்பொழுதே இங்கேயே உணர்ந்து கொள்வதற்கு சிறு முயற்சி செய்வீர்களானால் உங்களின் உள்ளார்ந்த உண்மையை உணர்ந்துகொள்ள இங்கேயே! இப்பொழுதே! ஒரு வாய்ப்பு உள்ளது.
"இருக்கிறேன்" என்னும் உணர்வு ஒன்றே போதுமானது உங்களின் இருப்பை உணர்ந்துகொள்ள.வெறும் வார்த்தைகளால் அதை அடைய முடியாது! மனதின் வாதங்களை விட்டுவிட்டு முயன்று பாருங்கள்.
உண்மையாகவே, உள்ளத் தெளிவினால் தெள்ளறிவு (ஞானம்) உதிக்கிறது.தெளிவின்மையால் ஞானம் தேய்கிறது. பெறுவதும் இழப்பதுமாகிய இந்த இருவழிப் பாதையை அறிந்துக்கொண்டு, ஞானத்தை அதிகரிக்கும் வழியில் ஒருவர் தன்னையே வழி நடத்திக் கொள்ளவேண்டும்.
உங்களின் கைகளை கொடுத்து உதவுவதற்கு பழக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை அவைகளை இழந்தாலும் அது சுமையாக தெரியாது! சிலசமயம் மனம் வரும்போது கைகள் இல்லாமல் போகவும் வாய்ப்புண்டு!
மிக உயர்த்த தேவனிலிருந்து மிகச் சாதாரணமான புல் வரை ஒரே சக்திதான் எல்லாவற்றிலும் நிறைந்திருகிறது. மனிதனில் அந்த சக்தியை எழுப்புவதற்கே நாம் வீட்டிற்கு வீடு சென்று முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவது இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் “மரண தண்டனை” என்றும் அறிவித்தார்.
அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால் “மரண தண்டனை” என்றனர். துறவி அரசர் குறிப்பிட்டிருந்த நாட்களுக்குப் பிறகு சிலம்பைக் கொண்டு சேர்த்தார். “இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார் அரசர்.
அற வழியில் நடந்த அந்த துறவியின் பதில்…
ஒன்று, கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசை பட்டதாக இருக்கும்.மரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும் (மரணத்திற்கு பயப்படுவது இல்லை).சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் என்று ஆகிவிடும்.
இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமே” என்றார் அரசர். துறவி கம்பீரமாக அரசனைப் பார்த்து “மூடனே… அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானது” என்று கூறி சென்றார். அரசர் தலைவணங்கி துறவியைய் அனுப்பி வைத்தார்.
சிவம் என்ற சொல்லிற்கு மங்களம் என்று பொருள்.இந்த உடல் உயிருடன் கூடியிருப்பதாலேயே மங்களப் பொருளாகிறது.உடலில் சிவமாகிய உயிர் பிரிந்து விட்டால் உடல் சவம் என்றே அழைக்கப்படுகிறது. ஆக உயிரே மங்களப் பொருளாகிய சிவம்!
உடலில் உயிர் உணர்வாகவே எல்லோராலும் அறிப்படுகிறது.அதுவே உடல் மற்றும் மனதின் அனைத்து செயலுக்கும் ஆதாரமாக இருப்பினும் அதில் கவனம் இருப்பதில்லை. விழிப்பு நிலையிலேயே இந்த நிலை என்றால் உறக்கத்தில் அது முற்றிலுமாக உணரப்படுவதில்லை.நான் என்ற முதல் நினைவும் அதை தொடர்ந்த இந்த உலகமும் தோன்றி மறைவதற்கு உரிய ஒரு இடமாக இந்த உயிர் உள்ளது.இதை உணர்ந்து அறிந்து கொள்வதே ஆறறிவு அடையப்பெற்ற மனிதனின் முதல் கடமை.
இராத்திரி என்றால் இருள் என்று பொருள்.சிவம் என்றால் ஒளி என்று பொருள்.இருளை போக்கவல்லது ஒளியே!
நம் புலன்களின் வசத்தினாலும் அவற்றை தொடர்ந்த மனதின் எண்ணங்களாலுமே உண்மையின் இயல்பை அறிவதில்லை. எண்ணங்களே உயிரின் இருப்பை மறைக்கிறது.புலன் மற்றும் மனதிற்கு ஆதாரமான உயிரின் உணர்வை,இருப்பை உணர்ந்து கொண்டால் அவற்றின் மாயைகளிலிருந்து விடுபடலாம்.
இருப்பை உணர்ந்து கொண்டால் என்றும் சிவராத்திரிதான்!
ஒருசமயம் இரண்டு சிறுவர்கள் அவ்வூரில் வசிக்கும் துறவி ஒருவரை சோதிக்க எண்ணி சிறிய குருவி ஒன்றினைப் பிடித்தார்கள். அதில் ஒருவன் அக்குருவியை தன் பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான்.நேரே அவரிடம் சென்றனர்.
ஐயா! என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான்.ஒருவேளை அவர் குருவி "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தனர்.
அவர்களின் சூழ்ச்சியை அறிந்த அவர் , "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
இந்த உவமையினால் அறியும் நீதியாவது அந்த குருவி நம் வாழ்க்கையையும், அந்த சிறுவர்கள் நம்மையும் உணர்த்துகிறது !
நம் வாழ்க்கையை அழிப்பதும்,சிறக்க வைப்பதும் நம் கையில் தானே உள்ளது!!