நீ என்பது உடலல்ல.அறியும் அறிவே நீ!
நமது சொரூபம் இருப்பு மட்டுமே!
இதில் எதேனுமொன்றைக் கலப்பது
அஞ்ஞானம்.
பந்தம்.
Thursday, June 21, 2012
ஒ! இறைவனே! ஒரு முறை என்னிடம் ஆயிரம் விருப்பங்கள் இருந்தன. ஆனால் உன்னை உள்ளது உள்ளபடி அறியவேண்டும் என்ற ஒரே ஆசையில் மற்ற அனைத்து விருப்பங்களும் கரைந்துவிட்டன. ~ரூமி
பூரணத்துடன் நீங்கள் பாலம் அமைத்துக் கொள்ளவில்லை என்றால்,உங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போய்விடும். காற்றில் மிதக்கும் சருகாகி விடுவீர்கள்.எங்கே போவோம் என்பது தெரியாது! நாம் யார்? என்பது புரியாது.
உண்மைக்கான தவிப்புடன் கொண்ட தேடலே அந்த பாலமாகும்!.
அழகென்பது இறைமையின் முதல் தரிசனம்! அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான். அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார், அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது. சாதாரணமாக மக்கள் அடுத்தவர் மிக அழகாக தோன்றியதால் தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர். உண்மை இதற்கு நேர் எதிரானது. அவர்கள் காதலில் விழுந்து விட்டதால் தான் அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர். அன்புதான் அடிப்படை. அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல, அடிப்படையில் அது ஆன்மீக ரீதியானது.உனது கண்ணாடியை சுத்தம் செய், உன்னைச் சுற்றி எவ்வளவு அழகு உள்ளது என்று பார்க்க முடியும். ஒரு படைப்பு செயல் இந்த உலகின் அழகை மேலும் வளப்படுத்தும். வன்முறையின்றி ஏதாவது நிகழும்போது அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.
எங்கெல்லாம் நீ அழகை பார்க்கிறாயோ அப்போது நீ புனித பூமியில் நிற்பதை நினைவில் கொள். இறைமையின் முதல் தரிசனம்தான் அழகு.
சாதாரண மனிதனாகவே இரு. அதுதான் உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்.
இரண்டு ஜென் குருக்களின் சீடர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அகிரா என்ற சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.”எங்கள் குரு மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் குரு என்ன செய்வார்?”, என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.
ஜிங்ஜு `எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயைபயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்’, என்றான்.அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் குரு உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டேன். ”
அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்” என்று என் குரு சொன்னார் என்றான் ஜிங்ஜு. உண்மையும் அதுவே!
சூரியன் மிகவும் பழமையானவன். இருப்பினும் வரும் நாள்களெல்லாம் அவனை கொண்டே புதுமையடைகின்றன. காலங்கள் மட்டுமே கடந்து செல்பவை. அவன் என்றும் நிலையானவன். அவன் என்றும் புதுமையே!
வாழ்வு நமது உடலையும் அறிவையும் கடந்து விரிந்து கிடக்கும் மர்மம். அதில் வாழ்வது மட்டுமே நம்மை நமது எல்லை தாண்டி எடுத்துச் செல்லும். விதை எப்படி கனியாகும்? என்று கேட்காதே. விதை மண்ணில் உயிர்ப்புடன் மாற்றம் அடைந்தால் மரம் பிறக்கும். மலர் மலரும், மணம் பரவும், பிரபஞ்சத்தில் ஒரு புதிய மணத்தைச் சேர்க்கும். அதன்பின் கனியும் கொடுக்கும். கனி கனிந்து தனக்குள் விதையை உணரும். இதுதான் விதை விரியும் அதிசயம். நாம் விரியக்கூடிய அதிசயமும் இதுதான். அப்படி வாழத் தேவையான ஆரோக்கியமடைய, தியான உணர்வு நிலை அடைய, விழிப்புணர்வு அவசியம்.
அதைத்தான் நாம் தியானமென்றும் அகத்தோடு கூடிய வாழ்க்கையென்றும் சொல்கிறோம்.
ஒரு பூவை பார்பவர் அதை ஒருபோதும் அப்படியே உள்வாங்கி கொள்வதில்லை. தான் ஏற்கனவே அறிந்த ஒன்றுடன் அதை இனிதே பார்க்கிறார். அதன் அழகையும் மணத்தையும் வேறொன்றுடன் ஒப்பிட்டு நோக்கியே உணர்கிறார். உள்ளதை உள்ளவாறு அறிவதை மனம் சதா தடுத்துக்கொண்டே இருக்கிறது!
இயற்கையில் ஒன்று மற்றொன்டுடன் வேறுபட்டே இருக்கும்.ஒவ்வொன்றும் தனித்த இயல்புடையது. மனதை அகற்றினால் ஒழிய உள்ளதை உள்ளவாறு அறிய இயலாது!அதுபோன்றே வார்த்தைகளும் நீங்கள் நினைத்ததை முழுவதும் அடுத்தவரிடம் சேர்ப்பதில்லை.அவரவர் அறிவுக்கு ஏற்றவாறே அது விளங்குகிறது.
முதலில் உங்களின் மனதை (நீங்கள் அறிந்ததை) நீக்கிவிட்டு உள்ளதை உள்ளவாறு உணர்ந்துகொள்ள முயலுங்கள். கண்டிப்பாக புதிய கோணம் ஒன்றை உணர்வீர்கள்.
அனைவரும் நம்மை அடையாளப்படுத்திகொள்வதில் தான் ஆர்வமுள்ளவராக இருக்கிறோம். தன்னை ஒரோ சிறந்த தலைவனாக, பொறுப்புள்ளவனாக, தந்தையாக, அன்னையாக, மகனாக, மொழி,தேசம் மற்றும் இனப்பற்றுள்ளவனாக, ஆற்றல், புகழ், செல்வம், கல்வி,பதவி,செல்வாக்கு முதலியவற்றில் வளம் மிக்கவனாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.
இவை அனைத்தும் அடையாளங்களே ஒழிய இவை நம்முடைய உண்மை நிலை அல்ல! இந்த அடையாளங்களின் நாம் நம்மை தொலைத்துவிட்டீர்கள் என்பதை கூட மறந்து விட்டோம்!
அடையாளம் என்பது பொய்யான தோற்றம்! அது உங்களின் உண்மை நிலை அல்ல! உங்களை நீங்கள் மென்மேலும் அடையாள படுத்திக் கொண்டால் உண்மையை உணர வாய்ப்பில்லாமல் போய்விடும்! அடையாளங்கள் உங்களை விட்டு நீங்கும் போது உண்மையை உணராவிட்டால் நீங்கள் காணமல் போய்விடுவீர்கள்!
அடையாளங்களை நீக்கி நமது உண்மை எதார்த்தத்தை அறிந்து கொண்டால் அதுவே எல்லா கட்டுகளிருந்தும் நம்மை விடுவிக்கும். தனித்துவமே உண்மையின் மணம். உங்களின் இருப்பு நிலை! அடையாளம் ஏதுமற்ற இயல்பு நிலை!அது யாராலும் உங்களுக்கு வழங்கப் பட்டதல்ல!
ஒரு பேரரசன் எல்லாவிதமான ராஜ சுகங்களையும் அனுபவித்து அலுத்துவிட்டான்.இனி இதை விடுத்து ஆத்மா ஞானத்தை அடைவது என்று தீர்மானித்து தனது ராஜா பரிவாரங்கள் புடைசூழ அந்த ஞானியின் ஆசிரமத்தை அடைந்தான்.ஆசிரமவாசிகளிடம் தான் மகாராஜா வந்திருப்பதாக அவரிடம் தெரிவிக்க சொன்னான்.அவர்களும் அப்படியே அந்த ஞானியிடம் தெரிவித்தனர்.
அதற்கு அவர் "நான் இறந்த பிறகு வரச் சொல்லுங்கள்" என்று பதிலுரைத்தார்.மன்னருக்கு இந்த பதில் ஆச்சரியத்தையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் தன்னிலையை வெளிக்காட்டாது அமைதியாக சென்றுவிட்டான். மீண்டும் ஒருமுறை தன்னுடன் இரு அரசவை பிரதானிகளை அழைத்துக் கொண்டு அவரை காண சென்றான். மீண்டும் நான் ராஜா வந்திருக்கிறேன் என்று கூறவும் அதே பதிலே மீண்டும் வந்தது!.ஆதங்கத்துடன் அவ்விடத்தை விட்டகன்றான்.
சிலகாலம் கழித்து தான் மட்டும் அவ்விடம் சென்று "வாழ்வின் உண்மையை உணர்வதற்காக வந்திருக்கிறேன்" என்று அவரிடம் தெரிவிக்கவும் என்றுரைத்தான். உள்ளிருந்து அழைப்பு வந்தது! வா மகனே! உனது அடையாளங்களை இழந்து விட்டாய். உனது "நான்" இறந்து விட்டது. இதுவே தக்க தருணம் ஒருவன் தன்னை உள்ளது உள்ளபடி உணர்வதற்கு என உரைத்து அவனை ஆற தழுவிக்கொண்டார்.