மனிதனிடம் மட்டுமல்ல உயிருள்ள எல்லாவற்றிலும்
நிச்சயமான ஒன்று மரணம் மட்டுமே!
ஆம் அது நிச்சயக்கப்பட்ட ஒன்றும் கூட..
மரணம் எதற்கு ஏற்படுகிறது?
உன் உடலுக்கா?இல்லை உன்னை(இந்த உடலை)
பற்றிய சேமித்து வைத்த நினைவிற்கா?
எதற்கு மரணம்?
தினமும் தூங்கும்போது இந்த உடலை பற்றிய
உணர்வு எங்கே மறைந்தது?
உன் நினைவுகள் எங்கே ஒளிந்துகொண்டது?
இந்த உலகம் எங்கே போனது?
மீண்டும் அவை எங்கிருந்து மீண்டது?
உண்மையை சொன்னால் தூக்கமும் மரணத்தின்
ஓர் ஒத்திகையே!
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
முதலில் நீ என்பது உன் உடலா?
இந்த கேள்வியை முன்வைத்ததும் அனைவரும்
நான் உடலல்ல என்று சொல்வதுண்டு.
ஒருவரிடம் கேட்கும் கேள்விகளை கொண்டு அவர்
எதனோடு சம்பந்தப் பட்டிருக்கிறார் என்பதை அறியலாம்.
உங்களின் பெயர்:
தங்கள் ஆணா:பெண்ணா?
நிறம்:
உயரம்:
ஜாதி:
பிறந்த ஊர்:
வயது:
உடன் பிறந்தோர்:
திருமணம் ஆனவரா:
தங்களின் தேசம்:
மொழி:
இந்த கேள்விகளின் பதில்கள் முற்றிலும் உடலை
சார்ந்தவையே.உங்களை நீங்கள் முழுமையாக உடலை சார்ந்தவராக
உருவகப்படுத்திக் கொண்டிருகிறீர்கள்.உங்களின் இயல்பு(அறிவு) நிலையை
மறந்து விட்டீர்கள்.உங்களை இந்த அறிவற்ற அழியும் பொருளுடன்
சம்பந்தப்படுத்துவதால் அழியும் உடலுடன் நாமும் அழிந்துவிடுவோம்
என்ற பயம் தானே ஏற்பட்டுவிடுகிறது.
இந்த பயம் போர்க்களத்தில் உள்ள அர்ஜுனனையும் பற்றிக்கொண்டது.
இவர்களெல்லாம் அழிந்துவிட்டால் பின் யாருக்காக நான் வாழ்வது என்று
ஞாயவானை போல் கேட்கிறான்.இவர்களை கொல்வதால் கிடைப்பது மூவுலக
பதவி என்றாலும் வேண்டேன் என்கிறான்.உண்மை என்னவென்றால் அவர்களுக்கு
ஊசிமுனை அளவு இடம் கொடுக்க மாட்டேன் என்பதாலேயே இப்போர் மூண்டது.
அவன் கவலை இவர்களெல்லாம் அழிந்துவிட்டால் பின் யாருக்கு முன் டம்பமாக
வாழ்வது என்பதே!தன்னை உடலாக பாவித்து கலக்கம் கொண்ட அர்ஜுனனை
நோக்கி கண்ணன் பின்வருமாறு கூறுகின்றார்.ஓ! பரதகுல தோன்றலே!நீ என்பது
உடலல்ல.நீயும் நானும் இந்த மன்னர்களும் மக்களும் நேற்று இல்லாமல் இருந்தோம் என்றில்லை.
இனி நாளை இல்லாமல் போவோம் என்பதும் இல்லை.நாம் என்றும் நித்யமாய் உள்ளவர்கள்.அறிவு சொரூபமானவர்கள்.(ஆத்மாக்கள்) ஆகையால் நீ இங்கே கொல்வது உடலை மட்டும் என்பதை நினைவில் கொள்வாயாக! என்று தெளிவுபடுத்தினார்.
விசயத்திற்கு வருவோம்.நாம் அழிவற்ற நித்யபொருள் என்ற உண்மை தெளிந்தால் மட்டுமே நீங்கள் ஞானசம்பந்தம் உடையவர்கள்.
அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
அறிவு வடிவென்று அருந்திருந் தானே.
அறிவுக்கு அழிவும் இல்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவு அல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின்றன மறை ஈறுகள் தாமே.
ஆக நீ என்பது துய அறிவே!
அறியப்படுவதிலிருந்து அறிபவன் வேறானவன்.
அந்த அறிபவனே நீ.
என்னுடையவை என்பதை அனைத்தையும் நீக்கி
எதை உன்னிலிருந்து வேறாக
அறியமுடியவில்லையோ அது நீயே!
No comments:
Post a Comment