Friday, November 11, 2011

அனுபவம்-அனுபவிப்பவனுக்கு மட்டுமே சொந்தம்


முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லேன்றால் சொல்லுமாறு எங்ஙனே.


சொல்லித் தெரிவதில்லை மன்மதகலை என்பார்கள்.
சிற்றின்பத்தை பற்றி எந்த அறிவும் இல்லாவிட்டாலும்
திருமணம் நடந்தவுடன் அதன் சுகத்தை உணர ஒரு துணை
இருந்தால் போதும்.அதன் அனுபவம் அவரவருக்கு வந்துவிடும்.

அதைவிடுத்து அதை வேறு எந்த உரையாலும்,அடுத்தவரின் அனுபவத்தாலும் 
உங்களுக்கு அந்த அனுபவத்தை பெற முடியாது.

உலகியலின் சிற்றின்பத்திற்கே இந்த நிலையென்றால்
மனவாக்கிற்கு எட்டாத பேரின்பத்தை வார்த்தைகளால்
எப்படி விளக்குவது?அதற்கும் ஒரு துணை தேவை.

நான் என்று உணர்விற்கு ஆதாரமான உணர்வினை
நீங்கள் உணராதவரை ஆத்மசுகத்தை உணர இயலாது.

நான் என்னும் எண்ணமும் தோன்றி மறையும்.தோன்றி,மறைவதற்கு 
ஒரு ஆதாரம் தேவை.நீங்கள் இருப்பதினால் நினைகின்றீர்களா? 
அல்லது நினைப்பதனால் இருகின்றீர்களா?
உங்களின் இருப்பை உணர நினைக்க வேண்டியது இல்லை.

அந்த இருப்பை உணர்ந்து நிற்கும் போது நான் என்னும்
முதல் எண்ணமும் கரைந்து அது மாத்திரமாய் நிற்கும்.
இது வார்த்தைகளால் எட்டும் நிலையல்ல.அனுபவம்.
அனுபவிப்பவனுக்கு மட்டுமே சொந்தம்

Download As PDF

Thursday, November 10, 2011

இறைவனுடன் உரையாடலாம்.




இறைவனின் மொழி மௌனம்.
மனிதனின் மொழியோ வார்த்தைகளால் ஆனது.


வார்த்தைகளே உலகத்தின் அனைத்து பிரச்சனைக்கும் 
காரணம்.ஆனால் உண்மையின் மொழியோ தூய்மையானது. 
மிக்க அமைதிமயமானது.அந்த முழு அமைதியின் குரலை 
நீங்கள் ஆன்மாவின் கீதம் என்றும் அழைக்கலாம்.


நம்மில் பலரும் இந்த அமைதின் குரலை,
மனதில் சதா ஓடிக்கொண்டிருக்கும் வார்த்தைகளின் 
சத்தத்தில் இழந்திருக்கலாம்.ஆனால் அது தொடர்ந்து 
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


"நான்" என்ற அகங்காரத்தின் விளைவால் அது கேட்பதில்லை.


உங்களின் உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் தொடர்ந்து கவனித்தால்,
நான் என்ற எண்ணத்தின் மறைவில் அந்த கீதத்தை கேட்கலாம்.
நான் என்ற எண்ணமே (அகங்காரமே) பல்வேறு குழப்பங்களையும்,
முரண்பாடுகளையும் தோற்றுவிற்கிறது. 


மனதின் கூச்சல்கள் நம் உண்மையான இருப்பின் அமைதியில் 
மறையும்வரை நாம் அதை உணர முடியாது.


வாழ்க்கையின் வெளிப்படைதன்மைகளை கடந்து,
எவரொருவர் தொடர்ந்து தன் உள்ளத்தில்அந்த அமைதியை 
தேட முயல்கிறாரோ அவர் அதன் கீதத்தை கேட்பார்.
அந்த மௌனத்தின் கீதம் தான் எல்லாவித ஞானங்களின் ஊற்றுக்கண்ணாய் இருக்கிறது.
அந்த மௌனத்தின் மொழியால் நாம் இறைவனுடன் உரையாடலாம்.
Download As PDF

Tuesday, November 8, 2011

விஷய அறிவே ஞானத்திற்கு தடை


பண்டிதர்கள்,மேதைகள்,படிப்பாளிகள் என்று அழைக்கப் 
படுபவர்கள் ஞானமடைவது என்பது மிகக் கடினமாகும்.
அப்படி ஞானம் பெற்றால் அது பேரதிசயமாகும்.

சமானியமானவர்கள் தன்மாற்றம் அடைவதற்கு சுலபமாக தயாராகி விடுகிறார்கள்.ஏனெனில் அவர்களிடம் தங்களை பிணைத்திருக்கும் தளையையும்,அறியாமையையும் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை.

விஷய அறிவாளியோ தன்னுடைய விஷய அறிவை இழப்பதற்குப் பயப்படுகிறான்.ஏனெனில் அது அவனது விலை மதிப்பற்ற சொத்து.
அவன் அதை பாதுகாப்பதற்கு தர்க்க ரீதியான காரணங்களையும், 
சாக்கு போக்குகளையும் கண்டுபிடிக்கிறான்.அனால் உண்மையில் 
அவனது விஷய அறிவை பாதுகாப்பதன் மூலம்,அவனது 
அறியாமையையே பாதுகாக்கிறான்.

அறிவுக்கு பின்னால் ஒளிந்துக் கொள்வதே அவனது அறியாமை.
அவனது சுயமுகத்தை மறைக்கும் முகமூடி.
நீங்கள் அவனது சுய முகத்தை பார்க்கமுடியாது.
அவனாலும் அதைப் பார்க்க முடியாது.

முகமூடியை அணிந்துக் கொண்டு கண்ணாடியின் முன்னே 
நின்றுக்கொண்டு "இதுதான் என்னுடைய சுயமுகம்" என்று நினைத்துக்கொள்கிறான்.   
Download As PDF