Saturday, April 9, 2011

ஏகாந்தம்.



உடல்,புலன்கள்,மனம்,புத்தி இவற்றுடன்
தான் தொடர்பு கொள்ளாதிருப்பதே உண்மையான ஏகாந்தம்.

உடலும் உலகின் ஒரு கூறுதான்.ஆகவே உடலின்
தொடர்பை நீக்குவது தான்-அதாவது நான்,எனது என்ற
வாசனைகள் அழிவதுதான் உண்மையான ஏகாந்தம்.

ஜனங்கள் அற்ற இடத்திற்கு செல்வதும்,தனித்து இருப்பதும்
ஏகாந்தம் என்று கருதுவது பெரும் பிழையாம்.


ஏனெனில் சம்சாரம் முழுமைக்குமான விதையாகிய
உடலோ கூடவே இருக்கிறது.
Download As PDF

உயிரின் இரு பரிமாணங்கள்.



உயிரின் இரு பரிமாணங்கள் ஆண்மையும்,பெண்மையும்.
ஆண்மையிருந்து பெண்மையும்,பெண்மையிலிருந்து  ஆண்மையும் உண்டாகிறது.

இதற்குமேல் இயற்கையின் கருணையை,தர்மத்தை என்னவென்று சொல்வது.

உடலளவில் வேறுபட்டாலும் பெண்மைக்கு என்று ஒரு சில பெருமைகள் இருக்கவே செய்கிறது.

பொறுமையும்,தன்னை இழப்பதில் உள்ள தியாகத்தின் உருவகமே பெண்மை.மண்ணையும்,
ஆறுகளையும் மற்றும் சிறப்பானவற்றை எல்லாம் பெண்பால் பெயரிட்டு அழைப்பது 
ஏனெனில் அவற்றின் தியாகத்தின்,பொறுமையின் பொருட்டே!

ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவு ஒன்றேயாம்,
ஆனாலும் பெண்ணுக்கு பேதை குணம் உண்டு என்றால் ஔவை.

மண்ணில் இட்ட விதை மண்ணின் சாரத்தை எடுத்தே வளர்கிறது.அதனால் மண்ணின் 
வளம் குன்றும்.நீரின் பெருமை எழுத்தில் அடங்கா.தன் இயல்பான தூய்மையை,தன்னை இழப்பதில் முன்னிலை.தாயை பழித்தாலும் நீரை பழிக்காதே என்பது பழமொழி.தாய் தன் அங்கத்தில் உடல் அளித்து உதிரத்தை உணவாக உட்டுகிறாள்.சிசுவை தன்னில் ஒரு பாகமாகவே கருதி அன்பை அளிக்கின்றாள்.

பேதமை என்பது தன்னை இழப்போம் என்று தெரிந்தே இழப்பது(தியாகம்).இதன் பொருட்டே இறைவனும் 
தாயுமானவன் என்றழைக்கப்படுகிறான்.

ஆகவே பெண்மையை போற்றுவதென்பது உண்மையில் என்னையே போற்றுவதாகும்.

தியாகமே! உன்னை வணங்குகிறேன்,வாழ்த்துகிறேன்.
வாழ்க பெண்மை!
Download As PDF

கல்வியின் பயன்.



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்.


மனிதன் கல்வியினால் அடையத்தக்க பெரும்பயன் என்னவெனில் இப்பிரபஞ்சத்தில் 

உள்ள அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ள வாலறிவாய் விளங்கும் 
தூய அறிவை தன்னுள்ளும் உணர்வதே மனிதன் தான் கற்ற கல்வியினால் 
அடைகின்ற பெரும்பயனாகும்.

கேள்வி, ஊறு,ஒளி,சுவை,நாற்றம் என்ற புலன்களை


கொண்டு காது,தோல்,கண்,நாக்கு,
மூக்கு என்ற பொறி வழியே 


ஓசை/சப்தம்,-தட்ப/வெட்பம்,கடினம்/மேன்மை,-காட்சி-அறுசுவை,நாற்றம்,துர்நாற்றம் ஆகியவற்றின் தொகுப்பாகிய இவ்வுலகத்தை, 


விருப்பு,வெறுப்பை தோற்றுவிக்கும் மனதை கொண்டு அனுபவிப்பவன் நான் என்னும் அகங்காரத்தை சித்தப்படுத்தி தெளிவற்ற புத்தியால் காணப்படும் இவ்வுடலே நான் என்னும் நினைவில்(மயக்கத்தில்!)  
வாழும் மனிதர்களே!

இவ்வைந்து அறிவிற்கும் ஆதாரமாய் உள்ளும் புறமும் நிறைந்து 
விளங்கும் 
தூய அறிவே  வாலறிவு எனப்படும்.





பார்வை என்ற புலனை கொண்டு கண் வழியே காட்சியாகிய உலகை காணலாம்.

ஆனால் பார்வைக்கு ஆதாரமாய் விளங்கும் அந்த தூய அறிவை அந்த பார்வையை 
கொண்டு அறிய இயலாது.

பார்வை என்ற அறிவையே காட்சியை கொண்டுதான் உணரமுடியும்.இப்படி எல்லா 

அறிவுக்கும் ஆதாரமாய் விளங்கும் மூலமே வாலறிவாகும்.


இங்கணம் அனைத்தும் தன்மயமாய் விளங்கும் அந்த தூய அறிவை உணர்வதால் 
நன்றியுணர்வு தோன்றும்.அதுவே தொழுதல்.


ஆக கல்வியின் பயனே தன்னில் விளங்கும் ஞானத்தை அறிவதே.
Download As PDF

அகரம் என்றால் ஆதியாய் நின்ற அறிவு.



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.



                                        திருக்குறள்.

அகரம் என்றால் புள்ளி என்று பொருள்.எல்லா எழுத்துக்களும் புள்ளியை 

முதலாக கொண்டே எழுகின்றன.வரிவடிவங்களுக்கு முதலெழுத்து புள்ளி.(புறத்தில்)

எழுத்துக்கள் இல்லாத மொழிகளும் புள்ளியையே ஆதாரமாக கொண்டே எழுகிறது.
எவ்வாறெனில் வாயிலிருந்து வார்த்தையாய் வெளிவருவதற்கு முன் அது 

எண்ணமாய் இருந்தது.எண்ணம் நினைவு என்ற புள்ளியிலிருந்து தோன்றுகின்றது.
இந்த நினைவே அகரம் என்றழைக்கப்படுகிறது.(
அகத்தில்)

(அகர முதல=அகர ம்+உதல,உதலம்=உலகம்) 
அகரம் என்றால் நினைவு.உதலம் என்றால் உலகம்.

நான் உள்ளவரை உலகம் உண்டு.உலகம் உள்ளவரை நான் உண்டு.
என்னையும் உலகத்தையும் பிணைக்கின்ற சக்தி ஒன்றும் உண்டு.அதுவே ஆதி.

இந்த ஆதியை முதலாக கொண்டே உலகமும் நானும்.

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் 
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் 
அந்தம் ஆதி என்மனார் புலவர்.



                                                         சிவஞான போதம்.

உருவத்தால் அவன் ஆண்,அவள் பெண் (உயர்திணை )
மற்றவை அது உலகம்(அஃறினை) என்று சுட்டி 
அறியப்படுகிற இம்மூன்றையும் முறையே மாயையை 
கொண்டு படைத்து,காத்து மீண்டும் மாயையில் ஒடுக்கி 
தான் மட்டும் தனித்து நிற்கின்ற அதையே ஆதி என்றுரைப்பர் 
அறிஞர்(புலவர்).

ஆக அனைத்தும் ஆதியையே முதலாக கொண்டுள்ளது.
Download As PDF

நூல் இலக்கணம்



ஒரு நூல் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்குரிய இலக்கண மரபுகளை 
பழம்பெருமை வாய்ந்த தொல்காப்பியம் எவ்வாறு விளக்குகிறது என்பதை 
இங்கே காண்போம்.

தொல்காப்பியம் என்ற சொல்லிற்கே (தொல்+காப்பு+இயம்) தொன்மையை 
காத்து இயம்புவது என்று பொருள்.

நூலுக்குத் தொல்காப்பியம் தரும் விளக்கம் :

நூல் என்று கூறப்பெறுவது -

1. தொடக்கமும் முடிவும் பொருள் முரண் இன்றி இருக்கவேண்டும்.

2. தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்ட வேண்டும்.

3. விரிய உரைக்கும் வகையிலாகப் பொருத்தம் உடையவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும்.

4. நுண்ணிதாகப் பொருளை விளக்க வேண்டும்.

தொல்காப்பியம் கூறும் நூலின்வகைகள் :

மரபிலிருந்து திரியாது சிறப்பொடு கூடிய நூல்கள் முதல் நூல், வழிநூல் என்று இரண்டுவகையின.

செய்வினைப் பயனை அடையாத, தூய்மையான அறிவினை உடைய முன்னோரால் செய்யப்பட்டது முதல்நூல்.

முதல்நூல் வழியில் வருவது வழிநூல். வழிநூல் நான்கு வகைப்படும்.

1.தொகுத்து நூலாக்கல்.

2..விரித்து நூலாக்கல்.

3.தொகுத்தும் விரித்தும் நூலாக்கல்.

4.மொழிபெயர்த்தல்

என நான்குவகை நூல்களும் வழக்கு வழிப்பட இயற்றல் வேண்டும்.
வழிநூல்கள் இலக்கணத்தில் மரபுகளில் மாறுபட்டால் சிதைந்த நூலாகும். 

தூய அறிவுடையோர் செய்த நூலில் சிதைவு இருக்காது.

தொல்காப்பியம் கூறும் நூலின் உத்தி வகைகள் :

1. சொன்னதைத் தெளிவாக அறிதல்
2. அதிகாரங்களை முறையாக அமைத்தல்
3. இறுதியில் தொகுத்துக் கூறல்
4. கூறுபடுத்தி உண்மையை நிலைநாட்டல்
5. சொன்ன பொருளோடு ஒன்ற சொல்லாத பொருளை இடர்ப்பாடின்றி முடித்தல்
6. வராதனவற்றைக் கூறுவதால் ஏனைய வரும் என முடித்தல்
7. வந்ததைக் கொண்டு வராதனவற்றை உணர்த்தல்
8. முன்பு கூறியதைப் பினபு சிறிது பிறழக் கூறுதல்
9. பொருந்தும் வண்ணம் கூறல்
10. ஒரு பக்கத்தே சொல்லுதல்
11. தன் கொள்கையைக் கூறுதல்
12. நூலில் வைத்துள்ள முறை பிறழாதிருத்தல்
13. பிறர் உடம்பட்டதைத் தானும் ஏற்றுக் கொள்ளுதல்
14. முற்கூறியவற்றைக் காத்தல்
15. பின்னர் வரும் நெறியைப் போற்றுதல்
16. தெளிவு படுத்திக் கூறுவோம் என்றல்
17. கூறியுள்ளோம் என்றல்
18. தான் புதிதாகக் குறியிடுதல்
19. ஒரு சார்பு இன்மை
20. முன்னோர் முடிபைக் காட்டல்
21. அமைத்துக் கொள்க என்று கூறல்
22. பல பொருள்கள் இருந்தாலும் நல்ல பொருளைக் கொள்ளுதல்
23. தொகுத்த மொழியான் வகுத்துக் கூறல்
24. எதிர்ப்போர் கருத்தை மறுத்துத் தன்கருத்தை உரைத்தல்
25. பிறர் கொள்கைகளையும் சான்றாகக் கூறல்
26. பெரியோர் கருத்தை ஏற்றுக் கொண்டு தான் அதையே கூறல்
27. கருத்து விளக்கத்திற்கு வேறு பொருள்களையும் இடையே கூறுதல்
28. முரணான பொருள்களையும் உணர்த்தல்
29. சொல்லின் குறையை நிறைவு செய்து கூறுதல்
30. தேவைக்குத் தகத் தன் கருத்தைந் தந்து இணைத்து உரைத்தல்
31. நினைவு படுத்திக் கூறுதல்
32. கருத்தை உய்த்து உணரும்படி கூறல். – இவற்றுடன் பிற உத்திகளையும் 

சேர்த்துக் கொண்டு சுருக்கமாக ஆனால் விளக்கமாத் தெளிவு படுத்த வேண்டும்.

தொல்காப்பியம் கூறும் நூலின் குற்றங்கள் :

1. முன்பு கூறியதையே பின்பு கூறல்
2. முன்பு கூறியதற்கு முரணாகப் பின்பு கூறல்
3. முழுவதுங் கூறாமல் குறைவாகக் கூறல்
4. தேவைக்கு அதிகமாக மிகுதிப்படுத்திக் கூறல்
5. பொருள் தராதவற்றைக் கூறல்
6. படிப்போர் பொருள் மயக்கமடையும்படி கூறல்
7. கேட்போர்க்கு இனிமை யில்லாத நிலையில் கூறல்
8. பெரியோர் பழித்த சொல்லைப் பயன் படுத்தி தாழ்ந்த நிலையில் கூறல்
9. நூலின் கருத்தைக் கூறாது தன் கருத்தை மனத்துட் கொண்டு கூறல்
10. கேட்போர், படிப்போர் மனம் கொள்ளாத நிலையில் கூறல் - இவையும் 

      இவை போன்றன பிறவும் நூலின் குற்றங்களாம்.

மேற்கூறிய குற்றங்கள் இல்லை என உணர்ந்தால் அவையே நூலின் குணங்களாம்.
Download As PDF

Thursday, April 7, 2011

புறம்போக்கு.



காட்சிக்கு ஆதாரமாய் விளங்குவது கண்.(பொறி)
கண்ணிற்கு ஆதாரமாய் விளங்குவது பார்வை.(புலன்)
பார்வையை கொண்டு அறிவது மனம்.(அந்தக்கரணம்)
இவை புறம்போக்கானவை.(வெளிபோக்குடையவை )
இவற்றை பின்பற்றி செல்பவனும் புறம்போக்கானவன்.



பொறி,புலன்,மனம் இவற்றை கொண்டு இவற்றின் உற்பத்தி
ஸ்தானத்தை(இடத்தை)அறிய இயலாது.மனம்(எண்ணம்)
தான் தோன்றும் இடத்தை அறிய முற்படும்போது அதை(எண்ணத்தை) 

கடந்த நிலையில் அனைத்திற்கும் ஆதாரமான உண்மை அறியப்படும்.

"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு"

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - சிவபுராணம்

உரை மனங் கடந்த வொருபெருவெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி -- திருவருட்பா அகவல்

நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு. ஔவையார்.
Download As PDF

Tuesday, April 5, 2011

செயல்அனைத்தும் மனதின் தூய்மைக்காகவே



செயல்அனைத்தும் மனதின் தூய்மைக்காகவே 
செய்யப்படுகிறது.உண்மை பொருளை அடைவதற்கு அன்று.
உண்மை பொருள் தீவிர விசாரணையால் சிந்தித்து தெளிவதானாலேயே பெறப்படும்.

அதைவிடுத்து கோடிக்கணக்கான கர்மங்களாலும்
(நதிகளில் நீராடுதல்,யாத்திரை பூஜை,வேள்வி,ஜபம், அன்னதானம்,பிராணாயாமம் 

மற்றும் நல்வினைகள் முதலிய யாவற்றாலும்) சிறிதும் சித்திக்காது.

                                             விவேக சூடாமணி.
Download As PDF

நீயும் அது ஆவாய்.



குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டை இட்டுக் 
குளத்துநீர்க் குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது
குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன் 
உளத்துலே நாகை நாதர் உருவறிந் துணர்வாய் நெஞ்சே!
                                                                        நெஞ்சறி விளக்கம்

ஆமைகள் தங்களது முட்டைகளை கரையில் இட்டுவிட்டு மணலில்  
புதைத்து விட்டு மீண்டும் தங்களின் நீர்நிலைக்கே திரும்பிவிடும்.

அவை நீர்நிலையில் இருந்தவாறே தங்கள் இட்ட
முட்டையை சிந்திக்கும்.அவைகளின் எண்ணத்தாலேயே
அவைகள்பொரிந்துவிடும்.(முட்டை இட்ட ஆமை இறந்துவிட்டால்
முட்டைகள் பொரியாது.இது பலரால் பலமுறை முயற்சிக்கபட்ட
உண்மை.)

அதுபோல உங்களின் உள்ளத்துள்ளே அறிவுருவாய் உள்ளதை 
உணர்ந்தால் நீயும் நினைவால் அதுவாவாய் என்பது பொருள்.   

Download As PDF

Monday, April 4, 2011

உன்னை அறிந்தால்



"நான்" என்னும் உணர்விற்கு ஆதாரமானதும் இயற்கையாக
என்றும் உள்ளதுமான பிரம்மம் ஒன்று இருக்கிறது.

விழிப்பு,கனவு,உறக்கம் என்ற மூன்று நிலைகளுக்கும்
சாட்சியாய் இருந்து கொண்டு நான்,நான் என்று அனைவராலும்
உணரப்படுவதாயும் புத்தியின் சாட்சிவடிவில் அது விளங்குகிறது.

தன்னுடைய இந்த உண்மையான வடிவை 
ஒருவன் அறிந்து மாசற்றவனாகவும்,சாவற்றவனாகவும் ஆகிறான்.

இந்நிலையை உணர்வதல்லாமல் முக்திக்கு வேறுவழியில்லை.

விவேக சூடாமணி.
Download As PDF

இயல்பு இயற்கை.



இயல்பு இயற்கை.இயல்பற்றது செயற்கை.
இயற்கையானது எல்லாம் இறைவனிடமிருந்து வருகிறது.

செயற்கையானவை மனிதனிடமிருந்து வருவது.

நீங்கள் இயல்பானதை கற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
இயல்பற்றதை கற்றுக்கொள்ளாதிருந்தால் போதும்.
Download As PDF

கோபமும்,விரோதமும்



ஐநூறு வருசத்தின் முன்பாக ஒரு மாமன்னரின் அரண்மனைக்கு பௌத்த 
துறவி ஒருவர் வந்திருக்கிறார். மன்னர் அவரை வரவேற்று தனக்கு ஏதாவது 
உபதேசம் செய்யுங்கள் என்று சொன்னார்.

உடனே துறவி நன்றாக உறங்குங்கள் என்று ஆசி தந்திருக்கிறார். 

மன்னர் என்ன இது உறங்க சொல்லி ஆசி தருகிறாரே என்ற தயக்கத்துடன் 
தான் ஏற்கனவே நிறைய நேரம் உறங்குவதாகவும், அதனால் தான் கவனிக்கபட 
வேண்டிய பல பணிகள் தாமதமாகின்றன என்பதால் தான் அதிகாலையில் எழுந்து 
பின்னிரவு வரை விழித்து வேலை செய்ய வேண்டியிருப்பதாக சொன்னார். 

உடனே துறவி இல்லை மன்னர் எவ்வளவு அதிகமான நேரம் தூங்குகின்றாரோ 

அவ்வளவு மக்களுக்கு நல்லது என்றார். மன்னருக்கு கோபம் வந்துவிடவே முட்டாள் 
போல பேசாதீர்கள் என்று கண்டித்தார்

அதற்கு துறவி சிரித்தபடியே மன்னா. விழித்திருக்கும் நேரத்தில் உங்களோடு 

சேர்ந்து கோபமும் விரோதமும், அதிகாரம் செய்யும் ஆசையும் விழித்து
கொண்டுதானிருக்கிறது. அதனால் பாதிக்கபடுகின்றவர்கள் மக்களே. ஆகவே 
நீங்கள் உறங்கும் போது மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொன்னார்.
Download As PDF

யார் குருவாக இருக்க முடியும்?



எந்த சிஷ்யனிடமும் குரு தான் அதை செய்கிறேன்
இதை செய்கிறேன் என கூறுவதில்லை.

அவ்வாறு கூறுபவர் அகந்தையின் சொரூபமாக
தான் உயர்ந்தவன் என காட்டவே செய்கிறார்.

அவர் குரு நிலையில் இருக்க வாய்ப்பில்லை.

பல ஜென்மங்களை காட்டுகிறேன் என கூறுபவரை விட...

உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வை 

கொடுப்பவரே குருவாக இருக்க முடியும்.
Download As PDF

Sunday, April 3, 2011

வாழ்வில் சலிப்பு.



உலகில் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினமும் சலிப்படைவதில்லை.
பறவைகளும்,விலங்குகளும்  மகிழ்ச்சியையே வாழ்க்கையாய் கொண்டிருக்கின்றன.

மனிதர்களில் சிந்திக்க தெரிந்த அறிவாளிகளும்,திறமைசாலிகளும் மட்டுமே 
அலுத்துப போகின்றனர்.

பாமரர்களுக்கு அலுப்பு ஏற்படுவதில்லை.அவர்கள் தங்களுடைய குடும்பத்தின் முன்னேற்றத்திலும்,செல்வ பெருக்கிலும் சிந்தை வைத்தவர்கள்.சின்ன சின்ன 
மகிழ்ச்சியில் தன்னை மறப்பவர்கள்.அவர்களுக்கு சலிப்பு வராது.விலங்குகளைப் 
போலவே தேடுவதும்,கூடுவதும்தான் அவர்களுக்கு வாழ்க்கையாகிப் போகிறது.

நீங்கள் அலுத்துப் போனீர்கள் என்றால் வாழ்கையின் அர்த்தமற்ற நிலையை,
பயனற்ற நிலையைப் புரிந்துகொண்டீர்கள் என்பதாகும்.அப்போது வாழ்க்கையை 
எப்படி எதிர்கொள்வீர்கள்?

இரண்டு விதமாக.ஒன்று அதிலிருந்து விலகி ஓடுவது அல்லது தப்பித்துக்கொள்வது.

மற்றொன்று-நேருக்குநேர் எதிர்கொள்வது.

எதிர்கொள்ள துணிபவன் உண்மையை காண்கிறான்.
Download As PDF