Saturday, April 9, 2011

நூல் இலக்கணம்



ஒரு நூல் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்குரிய இலக்கண மரபுகளை 
பழம்பெருமை வாய்ந்த தொல்காப்பியம் எவ்வாறு விளக்குகிறது என்பதை 
இங்கே காண்போம்.

தொல்காப்பியம் என்ற சொல்லிற்கே (தொல்+காப்பு+இயம்) தொன்மையை 
காத்து இயம்புவது என்று பொருள்.

நூலுக்குத் தொல்காப்பியம் தரும் விளக்கம் :

நூல் என்று கூறப்பெறுவது -

1. தொடக்கமும் முடிவும் பொருள் முரண் இன்றி இருக்கவேண்டும்.

2. தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்ட வேண்டும்.

3. விரிய உரைக்கும் வகையிலாகப் பொருத்தம் உடையவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும்.

4. நுண்ணிதாகப் பொருளை விளக்க வேண்டும்.

தொல்காப்பியம் கூறும் நூலின்வகைகள் :

மரபிலிருந்து திரியாது சிறப்பொடு கூடிய நூல்கள் முதல் நூல், வழிநூல் என்று இரண்டுவகையின.

செய்வினைப் பயனை அடையாத, தூய்மையான அறிவினை உடைய முன்னோரால் செய்யப்பட்டது முதல்நூல்.

முதல்நூல் வழியில் வருவது வழிநூல். வழிநூல் நான்கு வகைப்படும்.

1.தொகுத்து நூலாக்கல்.

2..விரித்து நூலாக்கல்.

3.தொகுத்தும் விரித்தும் நூலாக்கல்.

4.மொழிபெயர்த்தல்

என நான்குவகை நூல்களும் வழக்கு வழிப்பட இயற்றல் வேண்டும்.
வழிநூல்கள் இலக்கணத்தில் மரபுகளில் மாறுபட்டால் சிதைந்த நூலாகும். 

தூய அறிவுடையோர் செய்த நூலில் சிதைவு இருக்காது.

தொல்காப்பியம் கூறும் நூலின் உத்தி வகைகள் :

1. சொன்னதைத் தெளிவாக அறிதல்
2. அதிகாரங்களை முறையாக அமைத்தல்
3. இறுதியில் தொகுத்துக் கூறல்
4. கூறுபடுத்தி உண்மையை நிலைநாட்டல்
5. சொன்ன பொருளோடு ஒன்ற சொல்லாத பொருளை இடர்ப்பாடின்றி முடித்தல்
6. வராதனவற்றைக் கூறுவதால் ஏனைய வரும் என முடித்தல்
7. வந்ததைக் கொண்டு வராதனவற்றை உணர்த்தல்
8. முன்பு கூறியதைப் பினபு சிறிது பிறழக் கூறுதல்
9. பொருந்தும் வண்ணம் கூறல்
10. ஒரு பக்கத்தே சொல்லுதல்
11. தன் கொள்கையைக் கூறுதல்
12. நூலில் வைத்துள்ள முறை பிறழாதிருத்தல்
13. பிறர் உடம்பட்டதைத் தானும் ஏற்றுக் கொள்ளுதல்
14. முற்கூறியவற்றைக் காத்தல்
15. பின்னர் வரும் நெறியைப் போற்றுதல்
16. தெளிவு படுத்திக் கூறுவோம் என்றல்
17. கூறியுள்ளோம் என்றல்
18. தான் புதிதாகக் குறியிடுதல்
19. ஒரு சார்பு இன்மை
20. முன்னோர் முடிபைக் காட்டல்
21. அமைத்துக் கொள்க என்று கூறல்
22. பல பொருள்கள் இருந்தாலும் நல்ல பொருளைக் கொள்ளுதல்
23. தொகுத்த மொழியான் வகுத்துக் கூறல்
24. எதிர்ப்போர் கருத்தை மறுத்துத் தன்கருத்தை உரைத்தல்
25. பிறர் கொள்கைகளையும் சான்றாகக் கூறல்
26. பெரியோர் கருத்தை ஏற்றுக் கொண்டு தான் அதையே கூறல்
27. கருத்து விளக்கத்திற்கு வேறு பொருள்களையும் இடையே கூறுதல்
28. முரணான பொருள்களையும் உணர்த்தல்
29. சொல்லின் குறையை நிறைவு செய்து கூறுதல்
30. தேவைக்குத் தகத் தன் கருத்தைந் தந்து இணைத்து உரைத்தல்
31. நினைவு படுத்திக் கூறுதல்
32. கருத்தை உய்த்து உணரும்படி கூறல். – இவற்றுடன் பிற உத்திகளையும் 

சேர்த்துக் கொண்டு சுருக்கமாக ஆனால் விளக்கமாத் தெளிவு படுத்த வேண்டும்.

தொல்காப்பியம் கூறும் நூலின் குற்றங்கள் :

1. முன்பு கூறியதையே பின்பு கூறல்
2. முன்பு கூறியதற்கு முரணாகப் பின்பு கூறல்
3. முழுவதுங் கூறாமல் குறைவாகக் கூறல்
4. தேவைக்கு அதிகமாக மிகுதிப்படுத்திக் கூறல்
5. பொருள் தராதவற்றைக் கூறல்
6. படிப்போர் பொருள் மயக்கமடையும்படி கூறல்
7. கேட்போர்க்கு இனிமை யில்லாத நிலையில் கூறல்
8. பெரியோர் பழித்த சொல்லைப் பயன் படுத்தி தாழ்ந்த நிலையில் கூறல்
9. நூலின் கருத்தைக் கூறாது தன் கருத்தை மனத்துட் கொண்டு கூறல்
10. கேட்போர், படிப்போர் மனம் கொள்ளாத நிலையில் கூறல் - இவையும் 

      இவை போன்றன பிறவும் நூலின் குற்றங்களாம்.

மேற்கூறிய குற்றங்கள் இல்லை என உணர்ந்தால் அவையே நூலின் குணங்களாம்.
Download As PDF

No comments: