மனிதனுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் கொடையே அவனது மனம்! அதை வரமாக்கி கொள்வதோ அல்லது சாபமாக்கி கொள்வதோ அவரவரது செய்கையை பொறுத்தது! செயலுக்கு ஆதாரமான எண்ணமே அனைத்திற்கும் காரணமாக அமைகிறது. நன்றும் தீதும் பிறன் தர வாரா என்பது ஆன்றோர் வாக்கு. நன்மை அளிக்கும் எண்ணமும்,சொல்லும் செயலையுமே பெரியோர்கள் அறம் என்றழைத்தனர். செய்வன செய்தலும் செய்யாதன செய்யாதிருத்தலுமே அறம் என தொல்காப்பியமும் சான்று பகர்கின்றது. புலனின்பத்தால் மனதில் தோன்றும் காமம் வெகுளி மயக்கமுமே அதை மாசுபடுத்துகிறது. மாசற்ற மனமே அறத்திற்கேல்லாம் தலையாயது என்பதை வள்ளுவமும் வழிமொழிகிறது! அத்தகைய அறத்தை தானே உவந்து மேற்கொள்வதே சிறப்பு என்பதை அவ்வையும் ஒற்றை வரியில் அறம் செய்ய விரும்பு என்கிறார். ஆக மனதை வரமாகிக்கொள்ள வழி இதுவே!