Saturday, April 2, 2011

அறம் செய்ய விரும்பு.





அறம் செய்ய விரும்பு!

வெறும் மூன்று வார்த்தைகள்தான்.ஆனால் பொருள் மிக உன்னதமானது. இதற்கு 

நம்மவர்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கே...எழுதியவன் ஏட்டை கெடுத்தான்.
பாடியவன் பாட்டை கெடுத்தான் என்னும் கதை போலத்தான் உள்ளது.

அறம் என்றால் செய்வன செய்தலும் செய்யாதன செய்யாதிருத்தலும்மாம்.மேலும் அறம் என்பது தர்மம் ( விதிக்கப்பட்ட கடமை ) அல்லது நெறி எனப் பொருள்படும்.யுத்த தர்மம் எனில் 

யுத்தத்தில் கடைபிடிக்கும் நெறி என்று பொருள்.அதுபோன்று அவரவருக்கென்று விதிக்கப்பட்ட
உரிய கடமைகளை உணர்ந்து விருப்பமுடன் ஆற்றவேண்டும். இதில் உயர்வு 
தாழ்வில்லை. இதுவே அறம் எனப்பட்டது. 

புருஷார்த்தம் எனப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கில்  அறமே முதன்மையாகும்.

அறத்தை இருவகையாக இல்லறம்,துறவறம் என்று 
திருக்குறளில் வள்ளுவர்  பிரித்துள்ளார். மேலும் இல்லறத்தார்க்கும், துறவறத்தார்க்கும் இன்னது அறம் என உரைக்கிறார்.

இல்லறத்தார்க்கு இருபது அதிகாரத்திலும், துறவறத்தார்க்கு பதிமூன்று அதிகாரத்திலும் அவரற்குரிய ஒழுக்க மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை, அவருக்குரிய தர்மத்தை, அறத்தை, கடமையை (செயல்முறையை) விளக்குகிறார். மேலும் 
அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் அறனை பற்றிய சிறப்பை வலியுறுத்தி பத்து குறட்பாக்கள் உள்ளது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

(இங்கே இருமை என்பது பல்வேறு பொருளுடையது.)
...................................................................................................................
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.(ஔவை )
...................................................................................................................

திருமூலர் அறத்தை பற்றி பின்வருமாறு உரைக்கிறார்.

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

ஞானம் என்றால் அறிவு என்று பொருள்.அது புலன்களால் அறியும் அறிவல்ல.

புலன்களின் அறிவிற்கு ஆதாரமானஅறிவு.புலனறிவுகளை கடந்தது.அது வாலறிவு.
(எல்லா அறிவுகளின் தோற்றத்திற்கும் ஆதாரம்).

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

அறியும் அறிவு நீயே. இதை உணர்வதே ஞானம்.

ஞானத்திற்கும் மேலான ஓர் அறநெறி உலகத்தில் இல்லை.
இதை தவிர்த்து வேறொன்றை உரைக்கும் சமயம்,நல்ல சமயம் ஆகாது. 

அறிவால் அறிவை அறிவதே முத்தி.இதை தவிர்த்து எந்தச் சாதனங்களும் 
முடிநிலை முத்தியைத் தரமாட்டா. அதனால், ஞானத்திற் சிறந் தவர்களே 
மக்களுட் சிறந்தவராவர்.

தன்னை அறிதலே அறத்தில் சிறந்தது
என வலியுறுத்துகிறார்.

ஒவ்வொன்றிற்கும் விளக்கம் அளித்தால் நீண்ட கட்டுரை ஆகிவிடும்.

(தேவைபடின் அதையும் செய்வோம்.)

ஔவை
அறத்தை விரும்பு என ஒருவரியில் வடித்துவிட்டாள்.

Download As PDF

No comments: