மனிதனுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் கொடையே அவனது மனம்! அதை வரமாக்கி கொள்வதோ அல்லது சாபமாக்கி கொள்வதோ அவரவரது செய்கையை பொறுத்தது! செயலுக்கு ஆதாரமான எண்ணமே அனைத்திற்கும் காரணமாக அமைகிறது. நன்றும் தீதும் பிறன் தர வாரா என்பது ஆன்றோர் வாக்கு. நன்மை அளிக்கும் எண்ணமும்,சொல்லும் செயலையுமே பெரியோர்கள் அறம் என்றழைத்தனர். செய்வன செய்தலும் செய்யாதன செய்யாதிருத்தலுமே அறம் என தொல்காப்பியமும் சான்று பகர்கின்றது. புலனின்பத்தால் மனதில் தோன்றும் காமம் வெகுளி மயக்கமுமே அதை மாசுபடுத்துகிறது. மாசற்ற மனமே அறத்திற்கேல்லாம் தலையாயது என்பதை வள்ளுவமும் வழிமொழிகிறது! அத்தகைய அறத்தை தானே உவந்து மேற்கொள்வதே சிறப்பு என்பதை அவ்வையும் ஒற்றை வரியில் அறம் செய்ய விரும்பு என்கிறார். ஆக மனதை வரமாகிக்கொள்ள வழி இதுவே!
நீ என்பது உடலல்ல.அறியும் அறிவே நீ! நமது சொரூபம் இருப்பு மட்டுமே! இதில் எதேனுமொன்றைக் கலப்பது அஞ்ஞானம். பந்தம்.
Wednesday, November 21, 2012
Monday, October 22, 2012
Sunday, September 30, 2012
இதுதான் அன்பின் வெளிப்பாடு!
அன்பை பற்றி போதித்த குரு தன் சிடர்களுக்கு அது எவ்வாறு விளங்கியுள்ளது என்பதை அறிய அந்த நான்கு பேரையும் அன்பின் வெளிப்பாடாக ஏதேனும் கொண்டு வாருங்கள் என்று அனுப்பினார். ஒரு மாணவர் கையில் மலருடன் வந்தார். இரண்டாவது மாணவர் ஒரு வண்ணத்துப் பூச்சியுடன்வந்தார். மூன்றாவது மாணவர் சிறு பறவையின் குஞ்சுடன் வந்தார். நான்காவது மாணவர் வெறுங்கையுடன் வந்தார். நீ மட்டும் எதுவும் கொண்டு வரவில்லையே ஏன்? என்று கேட்டார் அந்த குரு
அந்த மாணவர் சொன்னார். நானும் மலரைப் பார்த்தேன்பறிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது ஆனால் மலர்செடியில் இருப்பதுதான் அழகு என்றும் தோன்றியதுஅதனால் விட்டுவிட்டேன். வண்ணத்து பூச்சியையும் பார்த்தேன். அதன் சுதந்திரமானவாழ்க்கையைப் பறித்துவிடக்கூடாது என்றுவிட்டுவிட்டேன். பறவையின் சிறுகுஞ்சையும் பார்த்தேன். அந்தக் குஞ்சை எடுத்து அதற்கு என்ன கொடுத்தாலும் அதற்கான தாயன்பை யாராலும் கொடுக்கமுடியாது என்று விட்டுவிட்டேன் என்றார்.
குரு மற்ற மூன்று மாணவர்களிடமும் சொன்னார் இதுதான் அன்பின் வெளிப்பாடு!
அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே உண்மையில் அன்பின் வெளிப்பாடு!
Thursday, June 21, 2012
ஒ! இறைவனே!
ஒரு முறை என்னிடம் ஆயிரம் விருப்பங்கள் இருந்தன.
ஆனால் உன்னை உள்ளது உள்ளபடி அறியவேண்டும் என்ற
ஒரே ஆசையில் மற்ற அனைத்து விருப்பங்களும் கரைந்துவிட்டன. ~ரூமி
வெளிப்பாடு!
மனிதன் அறியாமையில் இருப்பதை
விரும்புவதால் தான் அறியாமையில் இருக்கிறான்.
மேலும் அவனிடமிருந்து அதுவே வெளிப்படும்.
உண்மையை விரும்புபவனே உண்மையை அடைகிறான்.
மேலும் அவனிடமிருத்து உண்மையின் அறிவே பிரகாசிக்கிறது!
எல்லாம் எண்ணங்களே!
எல்லாம் எண்ணங்களே!
உங்களின் தற்போதைய நிலை
உங்களின் எண்ணங்களால் ஏற்பட்டது.
மேலும் உங்களின் வருங்கால நிலையையும்
உங்கள் எண்ணங்களே நிர்மாணிக்கும்.
உண்மையுடான தொடர்பு!
பூரணத்துடன் நீங்கள் பாலம் அமைத்துக் கொள்ளவில்லை என்றால்,உங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போய்விடும். காற்றில் மிதக்கும் சருகாகி விடுவீர்கள்.எங்கே போவோம் என்பது தெரியாது! நாம் யார்? என்பது புரியாது.
உண்மைக்கான தவிப்புடன் கொண்ட தேடலே அந்த பாலமாகும்!.
அழகென்பது இறைமையின் முதல் தரிசனம்!
அழகென்பது இறைமையின் முதல் தரிசனம்!
அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான். அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார், அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது. சாதாரணமாக மக்கள் அடுத்தவர் மிக அழகாக தோன்றியதால் தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர். உண்மை இதற்கு நேர் எதிரானது. அவர்கள் காதலில் விழுந்து விட்டதால் தான் அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர். அன்புதான் அடிப்படை.
அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல, அடிப்படையில் அது ஆன்மீக ரீதியானது.உனது கண்ணாடியை சுத்தம் செய், உன்னைச் சுற்றி எவ்வளவு அழகு உள்ளது என்று பார்க்க முடியும். ஒரு படைப்பு செயல் இந்த உலகின் அழகை மேலும் வளப்படுத்தும். வன்முறையின்றி ஏதாவது நிகழும்போது அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.
எங்கெல்லாம் நீ அழகை பார்க்கிறாயோ அப்போது நீ புனித பூமியில் நிற்பதை நினைவில் கொள்.
இறைமையின் முதல் தரிசனம்தான் அழகு.
சாதாரண மனிதனாகவே இரு.
சாதாரண மனிதனாகவே இரு.
அதுதான் உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்.
இரண்டு ஜென் குருக்களின் சீடர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அகிரா என்ற சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.”எங்கள் குரு மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் குரு என்ன செய்வார்?”, என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.
ஜிங்ஜு `எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயைபயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்’, என்றான்.அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் குரு உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டேன். ”
அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்” என்று என் குரு சொன்னார் என்றான் ஜிங்ஜு. உண்மையும் அதுவே!
பொக்கிஷங்கள்!
அன்பும்! கருணையுமே!
மனிதன் தன்னிடம் வைத்திருக்கும் பொக்கிஷங்கள்!
இவ்விரண்டும் ஆடம்பர அணிகலன்கள் அல்ல!
மேலும் இவையின்றி மனித குலம் தழைக்க வழியில்லை!
நிலைத்த ஒன்றே! என்றும் புதுமை!
சூரியன் மிகவும் பழமையானவன்.
இருப்பினும் வரும் நாள்களெல்லாம்
அவனை கொண்டே புதுமையடைகின்றன.
காலங்கள் மட்டுமே கடந்து செல்பவை.
அவன் என்றும் நிலையானவன்.
அவன் என்றும் புதுமையே!
வாழ்க்கையின் இரகசியம்!
வாழ்வு நமது உடலையும் அறிவையும் கடந்து விரிந்து கிடக்கும் மர்மம். அதில் வாழ்வது மட்டுமே நம்மை நமது எல்லை தாண்டி எடுத்துச் செல்லும். விதை எப்படி கனியாகும்? என்று கேட்காதே. விதை மண்ணில் உயிர்ப்புடன் மாற்றம் அடைந்தால் மரம் பிறக்கும். மலர் மலரும், மணம் பரவும், பிரபஞ்சத்தில் ஒரு புதிய மணத்தைச் சேர்க்கும். அதன்பின் கனியும் கொடுக்கும். கனி கனிந்து தனக்குள் விதையை உணரும். இதுதான் விதை விரியும் அதிசயம். நாம் விரியக்கூடிய அதிசயமும் இதுதான். அப்படி வாழத் தேவையான ஆரோக்கியமடைய, தியான உணர்வு நிலை அடைய, விழிப்புணர்வு அவசியம்.
அதைத்தான் நாம் தியானமென்றும் அகத்தோடு கூடிய வாழ்க்கையென்றும் சொல்கிறோம்.
உள்ளதை உள்ளவாறு உணர்ந்துகொள்ள....
ஒரு பூவை பார்பவர் அதை ஒருபோதும் அப்படியே உள்வாங்கி கொள்வதில்லை. தான் ஏற்கனவே அறிந்த ஒன்றுடன் அதை இனிதே பார்க்கிறார். அதன் அழகையும் மணத்தையும் வேறொன்றுடன் ஒப்பிட்டு நோக்கியே உணர்கிறார். உள்ளதை உள்ளவாறு அறிவதை மனம் சதா தடுத்துக்கொண்டே இருக்கிறது!
இயற்கையில் ஒன்று மற்றொன்டுடன் வேறுபட்டே இருக்கும்.ஒவ்வொன்றும் தனித்த இயல்புடையது. மனதை அகற்றினால் ஒழிய உள்ளதை உள்ளவாறு அறிய இயலாது!அதுபோன்றே வார்த்தைகளும் நீங்கள் நினைத்ததை முழுவதும் அடுத்தவரிடம் சேர்ப்பதில்லை.அவரவர் அறிவுக்கு ஏற்றவாறே அது விளங்குகிறது.
முதலில் உங்களின் மனதை (நீங்கள் அறிந்ததை) நீக்கிவிட்டு உள்ளதை உள்ளவாறு உணர்ந்துகொள்ள முயலுங்கள். கண்டிப்பாக புதிய கோணம் ஒன்றை உணர்வீர்கள்.
தனித்துவமும்! அடையாளமும்!
அனைவரும் நம்மை அடையாளப்படுத்திகொள்வதில் தான் ஆர்வமுள்ளவராக இருக்கிறோம். தன்னை ஒரோ சிறந்த தலைவனாக, பொறுப்புள்ளவனாக, தந்தையாக, அன்னையாக, மகனாக, மொழி,தேசம் மற்றும் இனப்பற்றுள்ளவனாக, ஆற்றல், புகழ், செல்வம், கல்வி,பதவி,செல்வாக்கு முதலியவற்றில் வளம் மிக்கவனாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.
இவை அனைத்தும் அடையாளங்களே ஒழிய இவை நம்முடைய உண்மை நிலை அல்ல! இந்த அடையாளங்களின் நாம் நம்மை தொலைத்துவிட்டீர்கள் என்பதை கூட மறந்து விட்டோம்!
அடையாளம் என்பது பொய்யான தோற்றம்! அது உங்களின் உண்மை நிலை அல்ல! உங்களை நீங்கள் மென்மேலும் அடையாள படுத்திக் கொண்டால் உண்மையை உணர வாய்ப்பில்லாமல் போய்விடும்! அடையாளங்கள் உங்களை விட்டு நீங்கும் போது உண்மையை உணராவிட்டால் நீங்கள் காணமல் போய்விடுவீர்கள்!
அடையாளங்களை நீக்கி நமது உண்மை எதார்த்தத்தை அறிந்து கொண்டால் அதுவே எல்லா கட்டுகளிருந்தும் நம்மை விடுவிக்கும். தனித்துவமே உண்மையின் மணம். உங்களின் இருப்பு நிலை! அடையாளம் ஏதுமற்ற இயல்பு நிலை!அது யாராலும் உங்களுக்கு வழங்கப் பட்டதல்ல!
நான் இறந்த பிறகு வரச் சொல்லுங்கள்!
ஒரு பேரரசன் எல்லாவிதமான ராஜ சுகங்களையும் அனுபவித்து அலுத்துவிட்டான்.இனி இதை விடுத்து ஆத்மா ஞானத்தை அடைவது என்று தீர்மானித்து தனது ராஜா பரிவாரங்கள் புடைசூழ அந்த ஞானியின் ஆசிரமத்தை அடைந்தான்.ஆசிரமவாசிகளிடம் தான் மகாராஜா வந்திருப்பதாக அவரிடம் தெரிவிக்க சொன்னான்.அவர்களும் அப்படியே அந்த ஞானியிடம் தெரிவித்தனர்.
அதற்கு அவர் "நான் இறந்த பிறகு வரச் சொல்லுங்கள்" என்று பதிலுரைத்தார்.மன்னருக்கு இந்த பதில் ஆச்சரியத்தையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் தன்னிலையை வெளிக்காட்டாது அமைதியாக சென்றுவிட்டான். மீண்டும் ஒருமுறை தன்னுடன் இரு அரசவை பிரதானிகளை அழைத்துக் கொண்டு அவரை காண சென்றான். மீண்டும் நான் ராஜா வந்திருக்கிறேன் என்று கூறவும் அதே பதிலே மீண்டும் வந்தது!.ஆதங்கத்துடன் அவ்விடத்தை விட்டகன்றான்.
சிலகாலம் கழித்து தான் மட்டும் அவ்விடம் சென்று "வாழ்வின் உண்மையை உணர்வதற்காக வந்திருக்கிறேன்" என்று அவரிடம் தெரிவிக்கவும் என்றுரைத்தான். உள்ளிருந்து அழைப்பு வந்தது! வா மகனே! உனது அடையாளங்களை இழந்து விட்டாய். உனது "நான்" இறந்து விட்டது. இதுவே தக்க தருணம் ஒருவன் தன்னை உள்ளது உள்ளபடி உணர்வதற்கு என உரைத்து அவனை ஆற தழுவிக்கொண்டார்.
Sunday, June 10, 2012
இதயத்தின் உள்ளேயே...
நீங்கள் உலகத்தின் எந்த மூலைக்கும் பயணிக்க வேண்டிய அவசியமில்லை.
உங்களின் இதயத்தின் உள்ளேயே பயணிக்க தொடங்குங்கள்.
அங்கே ஏராளமான புதையல்கள் ஒளிந்துள்ளதை கண்டறிவீர்கள்.
உங்களின் இதயத்தின் ஒளி வெள்ளத்தில் அமிழ்ந்துவிடுங்கள்.(கரைந்து விடுங்கள்)
தன்னை இழப்பதென்பது
கருணை வெளிப்பாடே தன்னை இழப்பத்தில்தான் உள்ளது!
தன்னை இழப்பதென்பது மறைந்து விடுவதல்ல!
~அது அன்பில் நிறைந்துவிடுவது!
அழகென்பது!
வருத்தத்குரியவர்கள்!
அன்பின் பெயரால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால்
அதற்காக ஒருபோதும் வருந்தாதீர்கள். வருத்தத்குரியவர்கள் அவர்களே!
இங்கே அனைத்தும் அன்பினாலேயே நிறைக்கப்பட்டிருக்கிறது என்பதை
அவர்கள் பொறுமையாகத்தான் புரிந்துக் கொள்வார்கள்.
மற்றும் உண்மையை புரிந்துக்கொள்வதற்கு சிலருக்குத்தான் அறிவிருக்கிறது!
மாறவேண்டியது!
நேற்றுவரை என் புத்திசாலித்தனம்
இந்த "உலகத்தைதான்" மாற்ற வேண்டும் நினைத்தது!
ஆனால் இன்றோ அறிவின் தெளிவால்
முதலில் மாறவேண்டியது "நான்தான்" என்பதை உணர்ந்தேன்!
~ அன்பின் கவிஞன் ரூமி.
விழிக்கு பின்னாலும் ஒரு பார்வை!
வெறும் வெளிப்பார்வையை கொண்டு உலகத்தை பார்க்காதீர்கள்.
உங்களின் விழிக்கு பின்னாலும் ஒரு பார்வை உண்டு!
அதை கொண்டு உலகத்தை பாருங்கள்!
ஏனெனில் மாற்றங்கள் பலவற்றை
முதலில் நீங்கள் அங்கேதான் காண்பீர்கள்!
தியானம் என்பது என்ன?
தியானம் என்பது அறிவின் தெளிவு!.
அது மனதின் நிலையல்ல.
மனம் ஒருபோதும் தெளிவடைவதில்லை.
மனம் என்பது குழப்பமே!
எண்ணங்கள் உங்களை சுற்றி மேக மூட்டங்களையே ஏற்படுத்தும்.
எப்போது எண்ணங்கள் முழுமையாக மறைகிறதோ,
மேலும் உங்களை சுற்றி பனிமூட்டங்கள் இல்லையோ
அதுவே தெளிவின் ஆரம்பம்.
மனம் இறக்கும் இடமே அறிவின் தெளிவு!
அனைத்தும் தெளிவாக விளங்கும் நிலை!
இங்கே அனைத்திலும் அந்த முழுமையின் வெளிபாட்டை காண்பீர்கள்.
அந்த முழுமையே உங்களிலும் நிறைந்திருப்பதை உணர்வீர்கள்!
தியானம் என்பது தெளிவு!
முழுமையான விழிப்புணர்வு!
அதை உங்களால் எண்ணமுடியாது!
உங்களின் எண்ணங்களை கைவிடுங்கள்!
அது போதும்..!!!
Friday, March 23, 2012
வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ளுங்கள்!
நாம் வாழ்வதற்கு பொருள் தேவைதான்.ஆனால் அதையும் தாண்டி நாம் வாழ்வதில் ஒரு பொருள் வேண்டுமல்லவா?! உண்மையில் அடுத்தவருக்கு உதவி செய்வதில்தான் அந்த பொருள் இருகிறது! மனிதன்மையும் அதுவே! நாம் செய்த உதவிகள்தான் நாம் மனதை நிறைவு செய்கிறது. அதிலும் எதிர்பார்ப்பை எடுத்துவிடுங்கள்.நாம் வாழ்வின் அர்த்தம் கூடிவிடும்.
எதுவும் நாம்முடைதல்ல-இருப்பதை இல்லாத இடத்தில் நிரப்பும் கருவி மாத்திரமே நாம். உதவுவதற்கு பொருள் வேண்டும் என்பதில்ல ஒரு வார்த்தைகூட போதுமானது. எனவே ஒவ்வொரு நாளும் உங்களின் வாழ்கையை அழகாக்கிக் கொள்ளுங்கள்!
Wednesday, February 29, 2012
உணர்க உணர்வு டையார்!
உங்களின் இருப்பை இப்பொழுதே இங்கேயே உணர்ந்து கொள்வதற்கு சிறு முயற்சி செய்வீர்களானால் உங்களின் உள்ளார்ந்த உண்மையை உணர்ந்துகொள்ள இங்கேயே!
இப்பொழுதே! ஒரு வாய்ப்பு உள்ளது.
"இருக்கிறேன்" என்னும் உணர்வு ஒன்றே போதுமானது உங்களின் இருப்பை உணர்ந்துகொள்ள.வெறும் வார்த்தைகளால் அதை அடைய முடியாது!
மனதின் வாதங்களை விட்டுவிட்டு முயன்று பாருங்கள்.
தெளிவே ஞானம்!
உண்மையாகவே, உள்ளத் தெளிவினால் தெள்ளறிவு (ஞானம்) உதிக்கிறது.தெளிவின்மையால் ஞானம் தேய்கிறது.
பெறுவதும் இழப்பதுமாகிய இந்த இருவழிப் பாதையை அறிந்துக்கொண்டு,
ஞானத்தை அதிகரிக்கும் வழியில் ஒருவர் தன்னையே வழி நடத்திக் கொள்ளவேண்டும்.
கொடுப்பதற்கே எல்லாம்...
உங்களின் கைகளை கொடுத்து உதவுவதற்கு பழக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை அவைகளை இழந்தாலும் அது சுமையாக தெரியாது! சிலசமயம் மனம் வரும்போது கைகள் இல்லாமல் போகவும் வாய்ப்புண்டு!
எங்கும் நிறைந்திருப்பது ஒன்றே!
எங்கும் நிறைந்திருப்பது ஒன்றே!
மிக உயர்த்த தேவனிலிருந்து மிகச் சாதாரணமான புல் வரை ஒரே சக்திதான் எல்லாவற்றிலும் நிறைந்திருகிறது. மனிதனில் அந்த சக்தியை எழுப்புவதற்கே நாம் வீட்டிற்கு வீடு சென்று முயற்சி செய்ய வேண்டும்.
தர்மம் சட்டத்தை விட மேலானது!
ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவது இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் “மரண தண்டனை” என்றும் அறிவித்தார்.
அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால் “மரண தண்டனை” என்றனர். துறவி அரசர் குறிப்பிட்டிருந்த நாட்களுக்குப் பிறகு சிலம்பைக் கொண்டு சேர்த்தார். “இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார் அரசர்.
அற வழியில் நடந்த அந்த துறவியின் பதில்…
ஒன்று, கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசை பட்டதாக இருக்கும்.மரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும் (மரணத்திற்கு பயப்படுவது இல்லை).சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் என்று ஆகிவிடும்.
இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமே” என்றார் அரசர். துறவி கம்பீரமாக அரசனைப் பார்த்து “மூடனே… அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானது” என்று கூறி சென்றார். அரசர் தலைவணங்கி துறவியைய் அனுப்பி வைத்தார்.
“உங்களிடம் சிறந்ததை உலகத்திற்கு கொடுங்கள்.உலகம், சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும்”.
சிவராத்திரி ஒரு விளக்கம்!
சிவம் என்ற சொல்லிற்கு மங்களம் என்று பொருள்.இந்த உடல் உயிருடன் கூடியிருப்பதாலேயே மங்களப் பொருளாகிறது.உடலில் சிவமாகிய உயிர் பிரிந்து விட்டால் உடல் சவம் என்றே அழைக்கப்படுகிறது. ஆக உயிரே மங்களப் பொருளாகிய சிவம்!
உடலில் உயிர் உணர்வாகவே எல்லோராலும் அறிப்படுகிறது.அதுவே உடல் மற்றும் மனதின் அனைத்து செயலுக்கும் ஆதாரமாக இருப்பினும் அதில் கவனம் இருப்பதில்லை. விழிப்பு நிலையிலேயே இந்த நிலை என்றால் உறக்கத்தில் அது முற்றிலுமாக உணரப்படுவதில்லை.நான் என்ற முதல் நினைவும் அதை தொடர்ந்த இந்த உலகமும் தோன்றி மறைவதற்கு உரிய ஒரு இடமாக இந்த உயிர் உள்ளது.இதை உணர்ந்து அறிந்து கொள்வதே ஆறறிவு அடையப்பெற்ற மனிதனின் முதல் கடமை.
இராத்திரி என்றால் இருள் என்று பொருள்.சிவம் என்றால் ஒளி என்று பொருள்.இருளை போக்கவல்லது ஒளியே!
நம் புலன்களின் வசத்தினாலும் அவற்றை தொடர்ந்த மனதின் எண்ணங்களாலுமே உண்மையின் இயல்பை அறிவதில்லை. எண்ணங்களே உயிரின் இருப்பை மறைக்கிறது.புலன் மற்றும் மனதிற்கு ஆதாரமான உயிரின் உணர்வை,இருப்பை உணர்ந்து கொண்டால் அவற்றின் மாயைகளிலிருந்து விடுபடலாம்.
இருப்பை உணர்ந்து கொண்டால் என்றும் சிவராத்திரிதான்!
எல்லாம் நம்ம கையிலே!
ஒருசமயம் இரண்டு சிறுவர்கள் அவ்வூரில் வசிக்கும் துறவி ஒருவரை சோதிக்க எண்ணி சிறிய குருவி ஒன்றினைப் பிடித்தார்கள். அதில் ஒருவன் அக்குருவியை தன் பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான்.நேரே அவரிடம் சென்றனர்.
ஐயா! என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான்.ஒருவேளை அவர் குருவி "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தனர்.
அவர்களின் சூழ்ச்சியை அறிந்த அவர் , "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
இந்த உவமையினால் அறியும் நீதியாவது அந்த குருவி நம் வாழ்க்கையையும், அந்த சிறுவர்கள் நம்மையும் உணர்த்துகிறது !
நம் வாழ்க்கையை அழிப்பதும்,சிறக்க வைப்பதும் நம் கையில் தானே உள்ளது!!
Monday, January 30, 2012
குரங்கு பிடி!
குரங்கை பிடிபதற்கென்று பிரத்யேகமான சில முறைகள் உள்ளன.அவற்றுள் ஒன்று,ஒரு பெரிய அளவிலான இளநீரில் அதன் கை செல்லும் அளவு துளையிட்டு வைப்பார்கள்.எதிர்பார்த்தபடி குரங்கு வரும்.அதன் உள்ளே கையை விட்டு வழுக்கையை சுரண்டும் கையளவு கிடைத்ததும் அப்படியே எடுக்க முயற்சிக்கும்.கையை எடுக்க வராது.அதன் பிடியை ஒருபோதும் தளர்த்தாது.அவ்வளவுதான்!அதனால் வேகமாக ஓடவோ தாவவோ முடியாது.
பிடிப்பது மிக சுலபமாகிவிடும்.
பிடிப்பது மிக சுலபமாகிவிடும்.
ஒருவிதத்தில் நாமும் இந்த குரங்கு மாதிரிதான்.வாழ்க்கை சக்கரத்தில் இந்த உடலேயே நாம் என்று நம்பி இதன்மேல் உள்ள அபிமானத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.அதன் மேல் உள்ள அபிமானத்தை (நான் என்பது இந்த உடலே என்று கருதுவது) விலக்கி உண்மையை புரிந்து கொண்டால் உங்களின் சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது.இல்லாவிட்டால் காலனின் கையில் சிக்கும் இந்த உடலே நாம் என்று எண்ணி இறக்க நேரிடும்.
Saturday, January 28, 2012
இருக்கிறது என்பதும்,இல்லை என்பதும்....
இருக்கிறது என்பதும்,இல்லை என்பதும் நம் அனுபவத்துடன் உணர்ந்துகொள்வதில்தான் உள்ளது.
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.
இருவரை அழைத்து அந்த பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கப்பட்டது.
ஒருவர் அந்த பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் உள்ளது என்று சொன்னார்.
மற்றவர் அந்த பாத்திரம் பாதியவு காலியாக உள்ளது என்று சொன்னார்.
அனுபவத்தில் இருவரின் கூற்றும் உண்மையே!
நாம் முழுமையை புரிநது கொண்டதினால் இந்த இரண்டையும் ஏற்றுக்கொண்டோம்.
எந்த ஒன்றையும் நம் அனுபவத்துடன் உணர்ந்து தெளிவதே அறிவு!
ஒவ்வொருவரின் கூற்றும் அவரவர் கோணத்தில் என்ன சொல்ல வருகிறார்
என்பதை அறிந்து அவர் சொல்லும் கூற்று நாம் அனுவபத்திற்கு உடன்படுமானால்
ஏற்றுகொள்வதே அறிவுடைமை.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
Labels:
திருக்குறளும் மறைப்பொருளும்
Tuesday, January 10, 2012
தெய்வீக இயற்கை!
தன் உண்மையைத் தானே அறிய ஒவ்வொருவரும் முயலவேண்டும்.
மனிதனைத் துன்புறுத்தும் பல இன்னல்களுக்கு உள்ள ஒரே பரிகாரம்
அவன் தன் தெய்வீக இயற்கையை அறிந்து கொள்வதுதான்.
நீங்கள் தான் பொறுப்பு.......
கடவுள் உங்களுக்காகச் செயல் புரிவாரென்றோ, தேவதைகளோ,
காவல் தெய்வங்களோ உங்களைப் பாதுகாப்பார்கள் என்றோ
நல்ல நேரம் உங்களுக்குத் துணை நிற்கும் என்றோ நினைக்காதீர்கள்.
இவையெல்லாம் உண்மை இல்லை.
இதை நம்பினால் நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள்.
அப்படி நம்பினால் எப்போதுமே சரியான நாளுக்காவோ, மாதத்திற்காகவோ,
ஆண்டுக்காகவோ தேவதைகளுக் காகவோ, தேவதூதருக்காகவோ காத்திருப்பீர்கள்.
அவ்வாறு செய்வதால் துக்கம் தான் அனுபவிப்பீர்கள்.
உங்கள் செயல்களையும், பேச்சையும், கர்மச் செயல்களையும் கவனியுங்கள்.
நல்லது செய்தால் நன்மை பெறுவீர்கள். கெட்டது செய்தால் தீமை அடைவீர்கள்.
தீதும் நன்றும் பிறன் தர வாரா.........
புரிதல்!
என் மகளுக்கு பாட்டி வடை சுட்ட கதை சொன்னேன்.
கதை முடிவில் நீதி என்னவென்றால்
நீ ஒருவனை ஏமாற்றினால் உன்னை ஒருவர் ஏமாற்றுவார்-என்றேன்.
இதுவரை அமைதியா கதை கேட்ட பொண்ணு,
"சரிப்பா அந்த நரிய யார் ஏமாத்தினது?"என்று கேட்டாள்.
இப்படிதான் நாம ஒன்னு நெனச்சி சொன்னா....
புரிஞ்சிகரவங்க வேற மாதிரி புரிஞ்சிகரங்க!
என்னத்த சொல்ல!!!
உண்மை அழகு !
கை ஒன்றுக்கு அழகு உண்டாவது ஆபரணங்களை அணிவதால் அல்ல!
ஆபரணங்கள் பூட்டி யாருடைய கையையும் அலங்கரித்துவிடலாம்.
உண்மையில் அடுத்தவருக்கு உதவும் பொழுதே
அந்த கை அழகுடையதாகிறது!
எல்லாம் எண்ணங்களே!
நம் தோற்றத்தை கண்ணாடியில் அழகுபடுத்திக்
கொள்வதுபோல் நம்மை நமது எண்ணங்களாலும்
செய்கைகளாலும் அழகுபடுத்திக் கொள்ளலாம் .
உங்களின் எண்ணங்களை முதலில் உங்களின்
ரசனைக்குரியதாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள்.
அது நிச்சயமாக அடுத்தவரின் ரசனைக்குரியதாகவும் இருக்கும்.
Monday, January 9, 2012
என்னை அறிய!
விளக்கின் ஒளியில் அனைத்தையும் காணலாம்.
மேலும் விளக்கை காண அதன் ஒளி ஒன்றே போதுமானது!
அதுபோன்று
அனைத்தையும் நான் காண்கிறேன்.என்னை காண
என் உணர்வின் இருப்பு ஒன்றே போதும்!
Sunday, January 8, 2012
Subscribe to:
Posts (Atom)