சிவம் என்ற சொல்லிற்கு மங்களம் என்று பொருள்.இந்த உடல் உயிருடன் கூடியிருப்பதாலேயே மங்களப் பொருளாகிறது.உடலில் சிவமாகிய உயிர் பிரிந்து விட்டால் உடல் சவம் என்றே அழைக்கப்படுகிறது. ஆக உயிரே மங்களப் பொருளாகிய சிவம்!
உடலில் உயிர் உணர்வாகவே எல்லோராலும் அறிப்படுகிறது.அதுவே உடல் மற்றும் மனதின் அனைத்து செயலுக்கும் ஆதாரமாக இருப்பினும் அதில் கவனம் இருப்பதில்லை. விழிப்பு நிலையிலேயே இந்த நிலை என்றால் உறக்கத்தில் அது முற்றிலுமாக உணரப்படுவதில்லை.நான் என்ற முதல் நினைவும் அதை தொடர்ந்த இந்த உலகமும் தோன்றி மறைவதற்கு உரிய ஒரு இடமாக இந்த உயிர் உள்ளது.இதை உணர்ந்து அறிந்து கொள்வதே ஆறறிவு அடையப்பெற்ற மனிதனின் முதல் கடமை.
இராத்திரி என்றால் இருள் என்று பொருள்.சிவம் என்றால் ஒளி என்று பொருள்.இருளை போக்கவல்லது ஒளியே!
நம் புலன்களின் வசத்தினாலும் அவற்றை தொடர்ந்த மனதின் எண்ணங்களாலுமே உண்மையின் இயல்பை அறிவதில்லை. எண்ணங்களே உயிரின் இருப்பை மறைக்கிறது.புலன் மற்றும் மனதிற்கு ஆதாரமான உயிரின் உணர்வை,இருப்பை உணர்ந்து கொண்டால் அவற்றின் மாயைகளிலிருந்து விடுபடலாம்.
இருப்பை உணர்ந்து கொண்டால் என்றும் சிவராத்திரிதான்!
No comments:
Post a Comment