ஒரு பேரரசன் எல்லாவிதமான ராஜ சுகங்களையும் அனுபவித்து அலுத்துவிட்டான்.இனி இதை விடுத்து ஆத்மா ஞானத்தை அடைவது என்று தீர்மானித்து தனது ராஜா பரிவாரங்கள் புடைசூழ அந்த ஞானியின் ஆசிரமத்தை அடைந்தான்.ஆசிரமவாசிகளிடம் தான் மகாராஜா வந்திருப்பதாக அவரிடம் தெரிவிக்க சொன்னான்.அவர்களும் அப்படியே அந்த ஞானியிடம் தெரிவித்தனர்.
அதற்கு அவர் "நான் இறந்த பிறகு வரச் சொல்லுங்கள்" என்று பதிலுரைத்தார்.மன்னருக்கு இந்த பதில் ஆச்சரியத்தையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் தன்னிலையை வெளிக்காட்டாது அமைதியாக சென்றுவிட்டான். மீண்டும் ஒருமுறை தன்னுடன் இரு அரசவை பிரதானிகளை அழைத்துக் கொண்டு அவரை காண சென்றான். மீண்டும் நான் ராஜா வந்திருக்கிறேன் என்று கூறவும் அதே பதிலே மீண்டும் வந்தது!.ஆதங்கத்துடன் அவ்விடத்தை விட்டகன்றான்.
சிலகாலம் கழித்து தான் மட்டும் அவ்விடம் சென்று "வாழ்வின் உண்மையை உணர்வதற்காக வந்திருக்கிறேன்" என்று அவரிடம் தெரிவிக்கவும் என்றுரைத்தான். உள்ளிருந்து அழைப்பு வந்தது! வா மகனே! உனது அடையாளங்களை இழந்து விட்டாய். உனது "நான்" இறந்து விட்டது. இதுவே தக்க தருணம் ஒருவன் தன்னை உள்ளது உள்ளபடி உணர்வதற்கு என உரைத்து அவனை ஆற தழுவிக்கொண்டார்.
No comments:
Post a Comment