Friday, January 31, 2014

கற்றதனால் ஆய பயன்!


கற்றதனால் ஆய பயன்!

பார்வை கேள்வி முகர்வு சுவை பரிசம் சிந்தை முதலிய அறிவுகளுக்கு ஆதாரமாய் விளங்கும் தன் சுய சொரூபத்தை அறிந்து ( உணர்ந்து ) கொள்வதே கல்வின் உண்மை பயன். புலன்களின் வழியே பெறுகின்ற அறிவு மாத்திரம் ஒருவனின் பிறவி பயனை அடைய செய்வதில்லை!

"கள்ள புலனைந்தும் காளாமணி விளக்கே!" என திருமந்திரமும்
"கள்ள புலனைந்தும் வஞ்சனையை செய்ய" என மாணிக்கவாசகரும் உரைப்பதை காணலாம்.

ஒருமையின் கண் தான் கற்ற கல்வி என்பது கண்ணுக்கு கண்ணாக காதுக்கு காதாக ஒவ்வொரு அறிவிற்கும் ஆதாரமாய் நிற்கின்ற அந்த ஒருமையின் கண்ணான தூய.அறிவை (வாலறிவை ) அறிவதாம்! கண்ணுக்கு ஆதாரமாய் நின்றாலும் கண்ணால் அதை காண முடியாது.மற்ற அறிவுகளின் நிலையும் அதுவேயாம்.

அறிகின்ற அறிவுகளுக்கு அப்பாலாய் தனித்து நிற்பதே தூய அறிவாம். அதுவே ஒருவனது உண்மை சொரூபம். இதனையே திருமூலர் கல்வியின் அதிகாரத்தில்

"குறிப்பறிந் தேன் உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. "

"நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே."

என்றும் கல்வின் உண்மை நிலையை விளக்குகிறார்.

"கற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்".
என இதனையே வள்ளுவரும் வழிமொழிகின்றார்.

ஒருமையின் கண் தான் கற்ற கல்வி என்பதன் உண்மை பொருளை அறிந்து உணர்ந்து நிற்பதே கல்வியின் உண்மை பயனாம்!

Download As PDF

No comments: