Friday, December 2, 2011

தன் உணர்வு

தன்னுணர்வு.

அடையவேண்டிய எல்லாவற்றிலும் தன் உணர்வுக்கு
மேலான பொருள் ஒன்று இல்லை.தன்னுணர்வுக்கு
அந்நியமாய் அறியப்படும் யாவும் வீணே!


ஆதலால் தன்னுணர்வுக்கு
அந்நியமாய் உள்ளதை நீக்கி தானேயான
அந்த உணர்வுடன் இருப்பதே மேலானதாகும்.



அதுவே உண்மையான தியானமாகும்.
Download As PDF

Sunday, November 27, 2011

எண்ணங்களில் விழிப்பாய் இருங்கள்!



எண்ணம்,சொல்,செயல் இம்மூன்றும் மனிதனுக்கு கிடைத்த மாபெரும் கொடை.
சொல்லுக்கும்,செயலுக்கும் எண்ணமே முதல் காரணம்.

உங்களின் சொல்லையும்,செயலையும் நிர்ணயப்பது
உங்களின் எண்ணமே!எண்ணங்களாலேயே மனிதன் உயர்வடைகிறான்.

சுயநலமற்ற எண்ணமும்,சொல்லும்,செயலும் என்றும் நல்லவையே!

நல்லதையே எண்ணுங்கள்.எண்ணுவதையே சொல்லுங்கள்.
சொல்வதையே செய்யுங்கள்!ஒரு மனிதனுக்கு இம்மூன்றும் ஒரு நேர்கோட்டில் 
அமையுமானால் வாழ்க்கை இயல்பாக அமையும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.
எண்ணத்தில் தூய்மையும்,தெளிவும் இல்லாவிட்டால்
அதை தொடர்ந்த சொல்லும்,செயலும் துன்பத்தையே தரும்.

எண்ணம் ஒன்றும்,சொல் ஒன்றும்,செயல் ஒன்றும்
இருப்பவர்கள் வாழ்க்கையில் கடைசிவரை நடித்துக்
கொண்டுத்தான் இருக்கவேண்டும்.அவருக்கே அவர் புதிராகி போவார்.

ஆக உங்களின் எண்ணங்களில் விழிப்பாய் இருங்கள்!
Download As PDF

Saturday, November 26, 2011

உலகம் அன்புமயமானது!



அன்பும்,கருணையும் மனிதனின் இயற்கை குணங்கள்.

அது ஒருவர் மீது மட்டும் வெளிப்படும்போது
(ஒருமுகப்படும் போது) காதலாகிறது.

அது தன்னை சார்ந்தவர்கள் மீது வெளிப்படும்போது பாசமாகிறது.

அது சமூகத்தின் மீது வெளிப்படும்போது இனம்,மொழி,கலை,
காலாசாரப் பற்றுடையதாகிறது.

அதுவே சற்று விரிவடைய சமுதாய அக்கறையாக வெளிப்படுகிறது.
அநீதியை காணும்போது கோபமாகவும்,ஆதங்கமாகவும்,
அனுதாபமாகவும்,நையாண்டியாகவும் வெளிப்படுகிறது.

அதன் உண்மை சொரூப்பதை தன்னுள் உணரும்போது
அதுவே அனைத்துள்ளும் நிறைந்துள்ளது.
எங்கும் அதன் எல்லையற்ற தன்மையை உணரலாம்.


ஆக உலகம் அன்புமயமானது! இறைவனும் கூட அதுவே!
Download As PDF

Thursday, November 24, 2011

கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

பொருளிலெல்லாம் மிகப்பெரிய பொருள் இறைவன்.
ஆனால் அது யாருக்கும் புலப்படுவதில்லை.
பெருங்கூச்சலிட்டு அழைப்பவன் இறைவன்.
ஆனால் அவன் அழைப்பை யாரும் கேட்பதில்லை.

மிக அருகில் இருப்பவன் இறைவன்.
ஆனால் யாரும் அவனை உணர்வதில்லை.
எல்லோர்க்கும் அவன் தன்னை பங்கிட்டுக் கொடுத்திருக்கிறான்.
ஆனால் அவன் பெயர் யாருக்கும் தெரிவதில்லை. 

உண்மைதான்....
சுவாசித்துக் கொண்டிருந்தாலும் விடும் மூச்சை மறந்தவர்கள் 
நாங்கள்!சூரியனின் பிரகாசத்தில் உலவினாலும் அவனை பற்றிய 
எந்த சுவாதினமும் இல்லை எங்களுக்கு!
கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

உடன் இருந்தாலும் மறப்போம்,
முடிந்தால் மறுப்போம் அவன் இல்லையென்று!
Download As PDF

Friday, November 18, 2011

ஆன்ம இலக்கை அடைய சிறந்த வழி எது?


அடைவதற்கு என்று இலக்கு ஒன்றும் கிடையாது.
எதையோ பெறுவதற்கும் ஏதுமில்லை.
ஆன்மாவே நீங்கள், அதாவது, ஆன்ம சொரூபமாகவே 

நீங்கள் எப்போதும் இருந்து வருகிறீர்கள். 

ஆன்மாவைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்த, '

ஆன்மாவாகவே இருக்கிறோம்' என்று உணர்வதைத் தவிர 
வேறொன்றும் சொல்வதற்கில்லை.

கடவுளை அல்லது ஆன்மாவைக் காண்பது என்றால்,
ஆன்மாவாகவே இருப்பது, அதாவது நீங்கள் உண்மையில்
உள்ளபடி இருப்புக் கொள்வதே ஆகும்.


'காண்பது' என்றால் நிலைபேறு கொள்வது. ஆன்மாவாகவே
இருக்கும் நீங்கள் ஆன்மாவை எட்டுவது எவ்வாறு என்று அறிய விரும்புகிறீர்கள்!

'உடலை நான்' என்கிற எண்ணத்தைக் கைவிடுக. புறப் பொருட்கள், 

தோற்றங்கள் பற்றிய எண்ணங்கள், அதாவது, அநாத்ம விஷயங்கள், 
யாவற்றையும் தவிர்க்கவும். புறப் பொருட்களைப் பற்றிய எண்ணங்களில் 
மனம் வெளிமுகமாக மேயத் தொடங்கும்போதே அதை நிறுத்தி மெய்யான 
நான் என்கிற உள்ளுணர்வில் - பதிய வையுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி இம்மட்டுமே.

மனம் முயற்சியின்றியே விருத்தியற்ற நிலையை சகஜமாக அடையும் வரையில், 

அதாவது அகங்கார-மமகாரங்கள், முற்றிலுமாக நசிக்கும் வரையில் சாதனையைத் 
தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
Download As PDF

Monday, November 14, 2011

மனித சக்திகள் இங்கே வீணடிக்கப்படுகிறது.


இன்றைய மனிதன் தன் வாழ்நாளில் தனது அடிப்படை தேவையான உணவு,உறைவிடம் 

இவற்றிற்கே தன் நேரத்தையும்,சக்தியையும் முழுமையாக செலவழித்து விடுகிறான்.

போதாகுறைக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தன்னை
முழுவதுமாக இழந்துவிடுகிறான்.தன் சுயதேவைக்கே (சுயநலத்திற்கே) 

நேரம் முழுவதும் சென்றுவிடுவதால் பின் அவனின் சுய சிந்தனைக்கும்,
கற்பனைக்கும் நேரமேது....


ஒரு நல்ல அரசு மனிதனின் இந்த அடிப்படை தேவையை பூர்த்தி செய்தால் 

அங்கே மனித சக்திகள் வளர்க்கப்படும். மனிதனின் பொதுநல போக்கு வளரும்.
 நல்ல தரமான மனிதர்கள் தோன்றுவார்கள்.சிந்தனைகள் மேம்படும்.கலைகள் வளரும்.
அவர்களது ரசனையும் கூடும்.

நாகரீகம் வளரும்.பொற்காலம் என்பதை கண்களால் காணலாம்.
பல பொற்காலங்களை கண்ட சமுதாயம் இது.
உலகிற்கு உயரிய நாகரீகங்களை வழங்கிய நாடு இது.

இன்று வெறும் அடையாளங்களை மட்டுமே சுமந்துக் கொண்டு சவமாய் காட்சி அளிக்கிறது 

மன்னன் எப்படியோ மக்களும் அவ்வழியே என்பார்கள்.ஒரு நல்ல தொலைநோக்கு இல்லாத தலைவர்களால் சுதந்திரம் பெற்றும் நாம் இன்னும் அடிமைகளாக வாழ்கிறோம்.மனித சக்திகள் 

இங்கே வீணடிக்கப்படுகிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே!!

இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைந்து விட்டால்..... 
Download As PDF

Friday, November 11, 2011

அனுபவம்-அனுபவிப்பவனுக்கு மட்டுமே சொந்தம்


முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லேன்றால் சொல்லுமாறு எங்ஙனே.


சொல்லித் தெரிவதில்லை மன்மதகலை என்பார்கள்.
சிற்றின்பத்தை பற்றி எந்த அறிவும் இல்லாவிட்டாலும்
திருமணம் நடந்தவுடன் அதன் சுகத்தை உணர ஒரு துணை
இருந்தால் போதும்.அதன் அனுபவம் அவரவருக்கு வந்துவிடும்.

அதைவிடுத்து அதை வேறு எந்த உரையாலும்,அடுத்தவரின் அனுபவத்தாலும் 
உங்களுக்கு அந்த அனுபவத்தை பெற முடியாது.

உலகியலின் சிற்றின்பத்திற்கே இந்த நிலையென்றால்
மனவாக்கிற்கு எட்டாத பேரின்பத்தை வார்த்தைகளால்
எப்படி விளக்குவது?அதற்கும் ஒரு துணை தேவை.

நான் என்று உணர்விற்கு ஆதாரமான உணர்வினை
நீங்கள் உணராதவரை ஆத்மசுகத்தை உணர இயலாது.

நான் என்னும் எண்ணமும் தோன்றி மறையும்.தோன்றி,மறைவதற்கு 
ஒரு ஆதாரம் தேவை.நீங்கள் இருப்பதினால் நினைகின்றீர்களா? 
அல்லது நினைப்பதனால் இருகின்றீர்களா?
உங்களின் இருப்பை உணர நினைக்க வேண்டியது இல்லை.

அந்த இருப்பை உணர்ந்து நிற்கும் போது நான் என்னும்
முதல் எண்ணமும் கரைந்து அது மாத்திரமாய் நிற்கும்.
இது வார்த்தைகளால் எட்டும் நிலையல்ல.அனுபவம்.
அனுபவிப்பவனுக்கு மட்டுமே சொந்தம்

Download As PDF