Monday, October 31, 2011



மெய்யறிவும்,மெய்யுணர்வும் ...

அறிவு,உணர்வு என்னும் இரண்டு சொற்கள் ஒரே பொருளை 
தருவது போல காணப்படுகிறது.எனினும் சிறிது பொருள் 
வேறுபாடு உண்டு.

அறிவு என்பது பொருள்களை திட்டவட்டமாக தெரிந்துகொள்வதை 
மட்டுமே குறிக்கும்.அவ்வாறு தெரிந்துகொண்டதோடு நில்லாமல் 
தெரிந்துகொண்ட அறிவு தெரிந்துகொள்ளப்பட்ட பொருளிலேயே 
அழுந்தி அதன் வண்ணமாய் ஆகி விடுதல் உணர்வை  குறிக்கும்.
அனுபவம் என்பது இதுவே.

எனவே "அறிவு" என்பது பொருள் அறிவும்,உணர்வென்பது 
அனுபவ அறிவுமாதல் விளங்கும்.பொருள்களை அறிதலோடு 
நிற்கின்ற பொருளறிவு முழு அறிவு ஆகாது.குறை அறிவே ஆகும்.ஏனெனில் பொருளை அதனில் அழுந்தி யறியும்பொழுதே 
அதனது இயல்பு முற்றும் விளங்கும்.

அவ்வாறன்றித் தான் வேறாகவே நின்று அறியும்பொழுது 
 அதன் தன்மை முற்றும் விளங்குதல் இல்லை.
அதனால் ,அனுபவ அறிவே -அ ஃதாவது உணர்வே 
நிறையறிவாகிறது.

இது பற்றியே உண்மை ஞானம்,தமிழில் "மெய்யறிவு" 
எனப்படாமல் "மெய்யுணர்வு" எனப்படுகிறது. 

Download As PDF

Monday, October 24, 2011

உபநிஷதங்கள் வற்புறுத்துவது மேன்மையை அல்ல. முழுமையையே!




உபநிஷதங்கள் வற்புறுத்துவது மேன்மையை அல்ல.
முழுமையையே என்பதை நினைவிற் கொள்க.
பூரணத்தையே உபநிஷதங்கள் வற்புறுத்துகின்றன.
உபநிஷதங்கள் வாழ்க்கைக்கு எதிரானவை அல்ல.


அவை வாழ்க்கையை துறக்கச் சொல்லவில்லை என்பது 
முதல் விஷயம்.அவற்றின் அணுகுமுறை முழுமையானது.
வாழ்க்கை முழுமையாக வாழ்வதற்கானது.


அவை தப்பித்துக்கொள்வதை உபதேசிக்கவில்லை.
நீங்கள் இந்த உலகியலேயே வாழ்வதை,உலகியலில் 
மேலோங்கி நிற்பதை,ஆனாலும் உலகியலில் ஆழ்ந்து 
விடாமல் உலகியலில் வாழ்வதை அவை விரும்புகின்றன.


வாழ்க்கையை துறக்க வேண்டுமென்றோ,
வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றோ,
வாழ்க்கை அழகற்றது ,பாவமானது என்றோ அவை 
உங்களுக்கு உபதேசிக்கவில்லை.


அவை வாழ்க்கையில் மகிழ்ச்சி கொள்கின்றன.
அது இறைவனின் கொடை.
அது கடவுளின் உருவ வெளிப்பாடு. 

Download As PDF

Saturday, September 3, 2011

முதல் அடியே மிகப்பெரிய ஓட்டம்தான்...



வாழ்க்கை பயணம்.


மனிதனின் முதல் அடியே மிகப்பெரிய ஓட்டம்தான்.
மிகப்பெரிய மாரத்தான் ஓட்டத்தைவிட பெரியது.

ஓட்டத்தில் வென்ற ஒவ்வொருவரும் தான் இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கிறோம்.அந்த ஓட்டத்தை ஒரு நிமிடம் நினைவு கூர்ந்தால் இந்த உலகவாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கடினமல்ல என்பது தெளிவாகும்.


பத்துகோடி பேர்களில் நானும் ஒருவன் கர்பவாசலில் 
அனைவரையும் கடந்து வெற்றி பெற்றே இந்த வாழ்வு பெறப்பட்டது 
என்பதை நினைக்கும்போது மிகவும் மலைப்பாக உள்ளது.

Download As PDF

Monday, August 22, 2011

சும்மா இருப்பது எப்படி?




ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?"என செய்முறை விளக்கம் 
தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை 
வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் 
ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு 
அளிப்பதாக அறிவித்தார்.


எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.சிலர் பேசாமலும்,
சிலர் அசையாமலும்,சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர். 
சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்.
இன்னும் சிலர் மலைகள்,காடுகள் என்று போய் சும்மா இருப்பதை 
செய்து காண்பித்தார்கள்.


ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த முயற்சியும் 
எடுக்காமல்,தன்னுடைய வேலைகளை எப்போதும்போல செய்துக்கொண்டிருந்தான்.போட்டியின் முடிவு நாள் வந்தது.
குரு முடிவை சொன்னபோது அனைவருக்கும் அதிர்ச்சி.


எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத்தான் குரு 
பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.இதை ஏற்காமல்,
எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.
இதற்கு குரு, 


"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்துக் சிந்தித்து,
எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்...
நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்க தவறிவிட்டீர்கள்...


ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல்,அந்தந்த 
நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி 
உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே"
என்று கூறினார் குரு.


ஆக சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது.
மனம்,நடந்து முடிந்து போன விஷயத்திற்கும்,
இனி வரப்போகிற விஷயத்திற்கும் குழப்பமடையாமல் 
இருப்பதே சும்மா இருப்பது.

Download As PDF

Thursday, August 4, 2011

பொய்வேஷம்

ஜாதி,சேர்க்கை,குலம்,கோத்திரம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டதும்,
பெயர்,வடிவம்,குணம்,குற்றம் ஆகியவை அற்றதும்,
இடம்,காலம்,,பொருள் முதலியவற்றைக் கடந்ததும் ஆகிய
பிரம்மம் எதுவோ அதுவே "நான்" என்று புத்தியில் ஒருவன் 

இடைவிடாது சிந்தித்தல் வேண்டும்.


உலகைப் பின்பற்றிச் செல்வதைதையும்,நூல்களைப் பின்பற்றிச்
செல்வதையும்கூட விட்டொழித்து ஆத்மாவில் பொய்யாக
கற்பிக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் ஒழிக்கவேண்டும்.



உறக்கத்தாலும் உலக வியாபாரத்தாலும்,ஐம்புலன்களின் விஷய அனுபவத்தாலும் ஏற்படும் ஆத்மா மறதிக்கு சிறிதும் அவகாசம் கொடுக்காமல் உண்மையான 
தனது ஆத்மா சொருபத்தை இடைவிடாது சிந்தித்து தன்மேல் ஏற்றிக்கொண்ட வேஷத்தை நடிகன் களைவதுபோல்பொய்யுடலைத்
தான் என்று எண்ணுவதை விட்டுவிடவேண்டும்.
Download As PDF

Monday, August 1, 2011

முதல் கடமை


அன்பு,கருணை,கடமை,சேவை,சமூகம் என்ற பெயரால் 
உங்களை நீங்களே பலியாக்கி கொள்ளவேண்டாம்.
இவை அனைத்தும் அறியாமையால் உங்களின் அகங்காரம் வளர்வதற்கும்,மென்மேலும் கடினமாவதற்கும் மட்டுமே உதவும்.

உங்களின் முதல் கடமை உங்களின் இருப்புதன்மையை 
உணர்வதே என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.


Download As PDF

Friday, July 29, 2011

வாழ்க்கை!



இங்கே எதை "நீங்கள்" என்று கருதிக்கொண்டீருக்கீர்களோ 
அந்த அகங்காரம் போலியானது.ஒருவேளை நீங்கள் 
அந்த பொய்முகத்துடன் வாழ்வீர்களானால் உங்கள் வாழ்க்கை 
முழுதும் வீணாகிவிடும்.

உங்களின் போலியான அகங்காரத்தை விட்டு வாழ்வீர்களானால்
உண்மையின்,எதார்த்தத்தின் மணம் உங்கள் வாழ்வு முழுவதும் நிறைந்திருக்கும்.

வாழ்கைக்கு ஆரம்பமும் இல்லை.முடிவும் இல்லை.
அது எப்பொழுதும் இருப்பது,வாழ்வே இறைவன்.

அதுவே உங்களுக்கு கொடையளிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம்
விழிப்புணர்வுடன் கூடிய இருதயம் மட்டுமே!

அப்பொழுதுதான் உங்களால் அதை உணர,சுவைக்க,
ஸ்பரிசிக்க முடியும்.மேலும் அந்த வெகுமதி
உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறது!

ஆகவே சிந்தியுங்கள்!கருதுங்கள்!பழக்க​ப்படுத்திக்கொள்ளுங்கள்!
Download As PDF