Wednesday, December 28, 2011

இங்கு எல்லாம் நானே!



"நான்" ஓர் அறிமுகம்.

நான் பார்க்கிறேன்.ஆனால் நான் கண்ணல்ல!
நான் கேட்கிறேன்.ஆனால் நான் காதல்ல!
நான் முகர்கிறேன்.ஆனால் நான் மூக்கல்ல!

நான் சுவைக்கிறேன்.ஆனால் நான் நாக்கல்ல!
நான் உணர்கிறேன்.ஆனால் நான் சரீரமல்ல!
நான் நினைக்கிறேன்.ஆனால் நான் மனமல்ல!
புலனும்,மனமும் என்னையே ஆதாரமாக கொண்டு பிரகாசிக்கின்றன.


நான் இருக்கிறேன்...............
என்பதை உணர மேற்கண்ட ஏதும் தேவை இல்லை.


என் இருப்பு ஒன்றே போதுமானது!
என்னை தேடாதே!
ஏனெனில் உன் தேடுதலே-
நானாய் இருக்கிறேன்.

Download As PDF

Wednesday, December 14, 2011

நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.



நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான,
யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ
அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல.

அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல.
மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது.
மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும்
விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.

உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும்,
உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.பொறாமை மறையும்
போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.

வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள் –
வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.

நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.
மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.

நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, 
அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.
Download As PDF

சிந்தித்து தெளிந்து இரண்டற கலப்பதுவே முக்தியாம்.





என்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தந்
தன்னைச் சிவமென்றான் சந்ததமும் – என்னைஉன்னிப்
பாரா மறைத்ததுவெ பாசமென்றான் இம்மூன்றும்
ஆராயந் தவர்முத்த ராம்.-சிவபோக சாரம் 


என் உடல்,என் மனம் என்னும் இவை என் உடைமைகள் அன்றி நானில்லை.
எங்கே எனது என்று பகுக்க முடியாமல் அறியும் இந்த "நான்" மட்டும்
எஞ்சி இருக்கிறதோ அந்த அறிவே நீயாம்!

நான் என்ற இந்த அறிவும் (நினைவும்) தோன்றி மறைவதால்,
(நினைப்பும்,மறப்புமாய் இருப்பதால்)-அதன் தோற்றதிற்கும்,மறைவிற்கும்
ஆதாரமான ஒரு பொருள் இருக்கவேண்டும்.அறிவிற்கறிவான அந்த
ஆதாரநிலையே ஆனந்தமயமான சிவமாம்.
(இன்பதுன்பமற்ற நிலையே ஆனந்தம்).

அறிவான தன்னையும்,தனக்கு ஆதார தலைவனையும் மறைப்பதுவே
ஆணவமாகிய இருளாம்.ஆணவம்,கன்மம்,மாயை இவையே பாசமாம்.

அறிவாகிய தன்னையும்,
இந்த நினைவிற் ஆதார அறிவையும்,
இவ்விரண்டையும் அறிய ஒண்ணாது மறப்பது
ஆகிய இம்மூன்றையும் சிந்தித்து தெளிந்து இரண்டற கலப்பதுவே முக்தியாம்.
Download As PDF

Friday, December 2, 2011

தன் உணர்வு

தன்னுணர்வு.

அடையவேண்டிய எல்லாவற்றிலும் தன் உணர்வுக்கு
மேலான பொருள் ஒன்று இல்லை.தன்னுணர்வுக்கு
அந்நியமாய் அறியப்படும் யாவும் வீணே!


ஆதலால் தன்னுணர்வுக்கு
அந்நியமாய் உள்ளதை நீக்கி தானேயான
அந்த உணர்வுடன் இருப்பதே மேலானதாகும்.



அதுவே உண்மையான தியானமாகும்.
Download As PDF

Sunday, November 27, 2011

எண்ணங்களில் விழிப்பாய் இருங்கள்!



எண்ணம்,சொல்,செயல் இம்மூன்றும் மனிதனுக்கு கிடைத்த மாபெரும் கொடை.
சொல்லுக்கும்,செயலுக்கும் எண்ணமே முதல் காரணம்.

உங்களின் சொல்லையும்,செயலையும் நிர்ணயப்பது
உங்களின் எண்ணமே!எண்ணங்களாலேயே மனிதன் உயர்வடைகிறான்.

சுயநலமற்ற எண்ணமும்,சொல்லும்,செயலும் என்றும் நல்லவையே!

நல்லதையே எண்ணுங்கள்.எண்ணுவதையே சொல்லுங்கள்.
சொல்வதையே செய்யுங்கள்!ஒரு மனிதனுக்கு இம்மூன்றும் ஒரு நேர்கோட்டில் 
அமையுமானால் வாழ்க்கை இயல்பாக அமையும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.
எண்ணத்தில் தூய்மையும்,தெளிவும் இல்லாவிட்டால்
அதை தொடர்ந்த சொல்லும்,செயலும் துன்பத்தையே தரும்.

எண்ணம் ஒன்றும்,சொல் ஒன்றும்,செயல் ஒன்றும்
இருப்பவர்கள் வாழ்க்கையில் கடைசிவரை நடித்துக்
கொண்டுத்தான் இருக்கவேண்டும்.அவருக்கே அவர் புதிராகி போவார்.

ஆக உங்களின் எண்ணங்களில் விழிப்பாய் இருங்கள்!
Download As PDF

Saturday, November 26, 2011

உலகம் அன்புமயமானது!



அன்பும்,கருணையும் மனிதனின் இயற்கை குணங்கள்.

அது ஒருவர் மீது மட்டும் வெளிப்படும்போது
(ஒருமுகப்படும் போது) காதலாகிறது.

அது தன்னை சார்ந்தவர்கள் மீது வெளிப்படும்போது பாசமாகிறது.

அது சமூகத்தின் மீது வெளிப்படும்போது இனம்,மொழி,கலை,
காலாசாரப் பற்றுடையதாகிறது.

அதுவே சற்று விரிவடைய சமுதாய அக்கறையாக வெளிப்படுகிறது.
அநீதியை காணும்போது கோபமாகவும்,ஆதங்கமாகவும்,
அனுதாபமாகவும்,நையாண்டியாகவும் வெளிப்படுகிறது.

அதன் உண்மை சொரூப்பதை தன்னுள் உணரும்போது
அதுவே அனைத்துள்ளும் நிறைந்துள்ளது.
எங்கும் அதன் எல்லையற்ற தன்மையை உணரலாம்.


ஆக உலகம் அன்புமயமானது! இறைவனும் கூட அதுவே!
Download As PDF

Thursday, November 24, 2011

கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

பொருளிலெல்லாம் மிகப்பெரிய பொருள் இறைவன்.
ஆனால் அது யாருக்கும் புலப்படுவதில்லை.
பெருங்கூச்சலிட்டு அழைப்பவன் இறைவன்.
ஆனால் அவன் அழைப்பை யாரும் கேட்பதில்லை.

மிக அருகில் இருப்பவன் இறைவன்.
ஆனால் யாரும் அவனை உணர்வதில்லை.
எல்லோர்க்கும் அவன் தன்னை பங்கிட்டுக் கொடுத்திருக்கிறான்.
ஆனால் அவன் பெயர் யாருக்கும் தெரிவதில்லை. 

உண்மைதான்....
சுவாசித்துக் கொண்டிருந்தாலும் விடும் மூச்சை மறந்தவர்கள் 
நாங்கள்!சூரியனின் பிரகாசத்தில் உலவினாலும் அவனை பற்றிய 
எந்த சுவாதினமும் இல்லை எங்களுக்கு!
கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

உடன் இருந்தாலும் மறப்போம்,
முடிந்தால் மறுப்போம் அவன் இல்லையென்று!
Download As PDF