Thursday, May 19, 2011

அறிவு என்னும் கதவு திறந்திருந்தால்...



சுபி ஞானி ஒருவரிடம் ஒரு விவசாயி வந்தான்.

''ஐயா.என் மனைவி வீடு முழுவதும் ஆடு,மாடு,கோழி
என்று வளர்க்கிறாள்.அதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே 

ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.இதற்கு நீங்கள்தான் ஒரு வழி 
சொல்ல வேண்டும்.''என்று அவன் ஞானியிடம் சொன்னான்.

அவன் வீட்டைக் கவனித்த அந்த ஞானி சொன்னார்,

''உன் வீட்டில் தான் ஜன்னல்கள் இருக்கின்றனவே?
அவற்றை ஏன் மூடி வைத்திருக்கிறாய்?ஜன்னலைத் திறந்து 
விட்டால் காற்று நன்றாக வரும்.துர்நாற்றமும் போய்விடும்.

''உடனே விவசாயி பதற்றத்துடன் ,''ஐயையோ,ஜன்னலைத் திறந்து 

விட்டால் என் புறாக்கள் எல்லாம் பறந்து போய்விடுமே?''என்றான்.
அதிக முக்கியத்துவம் இல்லாத புறாக்களுக்காக ஜன்னலைத் 

திறக்காமல் துர் நாற்றத்தை அவன் சகித்துக் கொள்கிறான்.

அதே போல நாமும் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை 

எண்ணிக்கொண்டே நமது அறிவு என்னும் ஜன்னலை திறவாதிருக்கிறோம்.

திறந்திருந்தால் அறியாமை வெளியேறியிருக்கும்.

அன்பால் உங்கள் உள்ளம் நிறைந்திருக்கும்.
Download As PDF

பணிவு என்பது புரிதலில் தான் உள்ளது.



அசோக சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது 
எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் 
தன் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.

அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர்
ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.

அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.

மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,

ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும்
உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.
மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.

மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.
ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புலித்தலையை
வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர்
தன் வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டு அனைவரும் அஞ்சிப்
பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட
யாரும் வாங்க முன்வரவில்லை.

விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையை 

யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.
இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.

இப்போது மன்னர் சொன்னார்,''தளபதியே,

மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.
இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது? 

இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரிகிறது.

உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை 
என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில்
என்ன தவறு இருக்க முடியும்?''

தளபதிக்கு இப்போது புரிந்தது.
பணிவு என்பது புரிதலில் தான் உள்ளது என்பது.
Download As PDF

உனக்குள்ளே இருக்கிறது.



பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 
காலையில் சென்று தூரத்தில் உள்ள ஒரு மலையை பார்த்து 
கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு 
பெரிய பொக்கிஷம் உள்ளது, என்று ஒருவன் கேள்விப்பட்டான்.

உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான்.
மணலின் மீது அவனது நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது.
பொக்கிஷத்தை பெற அவன் மணலை தோண்ட ஆரம்பித்தான்.

அவன் தோண்ட தோண்ட சூரியன் மேலெழுந்து கொண்டிருந்தது.
அவனது நிழல் சுருங்கி கொண்டே இருந்தது,அவன் தோண்டி 

கொண்டே இருந்தான்.நண்பகலில் அவன் நிழல் அவன் 
காலடிக்குள் நுழைந்து கொண்டது.

நிழலே இல்லை.
அவன் ஏமாற்றத்தால் அழுது புலம்பினான்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு பெரியவர் அவனது செயல் 

கண்டு சிரித்தார்.அவன் அவரை பார்த்தான்.அவர் கூறினார்:

இப்போதுதான் உன் நிழல் பொக்கிஷம்
இருக்கும் சரியான இடத்தை காண்பிக்கிறது.

அது உனக்குள்ளே இருக்கிறது என்றார்.
Download As PDF

Tuesday, May 17, 2011

மனதை இழக்க வேண்டும்.



பூஜை,மந்திரங்கள்,மதச்சடங்குகள்,
உருவ,அருவ வழிபாடுகள் மூலமாக,இந்த உலகத்தில்
பல பொருள்களை விசேஷமாக நீங்கள் அடையலாம்.

ஆனால் கடவுள் தன்மையை ஒருக்காலும் அடைய முடியாது.
அந்த மைய பேரின்ப நிலையை,சலிப்பற்ற ஆனந்த நிலையை 
அடைய மனதை ஒருவன் இழக்க வேண்டும்.

இதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.உழைப்பு வேண்டும்.
ஆகவேதான் பெரும்பாலோர் ,"சீச்சீ இந்த பழம் புளிக்கும்" 
என்று ஒரு கட்டதில் பயந்து திரும்பவும் உலகத்திற்கே 
ஓடிவந்து விடுகின்றனர்.

என்ன செய்வது?
அந்த தைரியத்தை அவர்கள்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
அதற்கு சுயசிந்தனை அவசியம்.
Download As PDF

ஆசை படுவது யார்?



ஆசை படுவது யார்?

என்று நீங்கள் அமைதியாக உட்கார்ந்து சிந்தியுங்கள்.

உங்கள் உடலா?,உங்கள் மனமா?
நிச்சயம் உடலாக இருக்க முடியாது.
ஏனெனில் அது மனம் வழியே செயல்படுகிறது.

பிறகு மனமா?ஆமாம்.
இப்பொழுது அப்படியே இருக்கட்டும்.

மனம் எப்படி செயல்படுகிறது?
உங்கள் இறந்தகால,வருங்கால எண்ணங்களினால்,
அறிந்ததை அடைய ஆவல் கொண்டு உங்களை 
அலைய வைக்கிறது.

"இதோ இன்பம்,அதோ இன்பம்" என்று உங்களை 
விரட்டிக் கொண்டே இருக்கிறது.


ஆனால் ஒன்றை அடைந்தால்,அதில் சலிப்புற்று,
வேறு ஒன்றிற்கு ஏன் ஆசைபடுகிறீர்கள்? என்று
என்றைக்காவது ஆழ்ந்து சிந்தித்து இருக்கிறீர்களா?

இந்த உடலுக்கும் மனதிற்கும் எது ஆதாரம்,
ஏன் மனம் அலை பாய்ந்துக்கொண்டிருக்கிறது 
என்று தனிமையாக சிந்தித்து இருக்கிறீர்களா?

அப்படி ஒருவர் சிந்திக்கத் தொடங்கினால்,
உண்மையில் "தான் யார்" என்று விளங்க ஆரம்பிக்கும்.

அது உங்கள் "உயிர்தன்மை" யைத் தவிர
வேறு எதுவும் இல்லை.

அது தன் உணர்வாய்,தன் அறிவாய்,
தன்னையே தேடுகிறது.

ஆனால் அதுவே மனமாகி,படர்க்கை நிலை அடைந்து,
அந்த "தேடுதலை" சாதாரண மக்களிடம்
இந்த உலகத்தில் தேட வைக்கிறது.

தன்னை தானே தேடுவது உண்மைநிலை.
உலகத்தில் தேடுவது பொய்மைநிலை.

இந்த வித்தியாசத்தை ஒருவன் நன்றாக புரிந்துக் கொள்ளவேண்டும்.  

Download As PDF

Wednesday, May 11, 2011

வாழ்வு இனிதாக!



தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.
                               திரிகடுகம் 12.

தளராமுயற்சி உள்ளவன் கடன்படாது வாழ்வான்.
நல்ல வேளாளன் என்பவன் பிறரின் பசியை போக்காது உண்ணாதவன்.
கேளாளன் என்பவன் செய்நன்றி மறவாதவன்.
இவ்மூவரின் குணமாகிய தளர முயற்சியும்,
தன்பசி போன்று பிறர்பசி ஆற்றுவித்தல்,செய்நன்றி அறிதல் 
ஆகிய குணங்களை கொண்டு வாழும் வாழ்வே இனிது.
Download As PDF

நீங்களே "உண்மை" யாக மாறலாம்.



உண்மை என்பது ஒரு முடிவல்ல,
உண்மை என்பது நீங்கள் போய் சேரவேண்டிய இடமல்ல.

அது ஒரு வாழ்க்கை அனுபவம்.
உண்மையின் அருகில் செல்ல முடியாது.
அனால் நீங்களே "உண்மை" யாக மாறலாம்.

நீங்கள் யார்?
என்பதின் மூலத்தை அடைவதுதான் "உண்மை" என்பது.
உண்மை என்பது எப்போதும் இருக்கிறது.

நீங்கள் "உடல்" என்றும் "மனம்" என்றும்
சேர்த்துவைத்த குவியலே அதை மூடியிருக்கிறது.
இந்த எல்லைகளை தாண்டிய உயிர்த்தன்மை அது.

உங்கள் முட்டாள் தனங்களை எல்லாம் விட்டுவிட்டால்
பிறகு "நீங்கள்" என்பதே உண்மைதான்.

முட்டாள்தனமென்பது உங்கள் உடலில்,மனதில்
"நான்" என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ
அந்த அடையாளங்களைத்தான் சொல்கிறேன்.
Download As PDF