Saturday, August 22, 2015

சென்னப் பட்டினத்தின் தொன்மை வரலாறு.

சென்னப் பட்டினத்தின் தொன்மை வரலாறு !

கடலும் கரையும் சார்ந்த பகுதிக்கு பட்டினம் என்று பெயர். சென்னப்  பட்டினம் என்பதற்கு நல்ல பட்டினம் என்று பொருள்.வேர் சொல் சென்ன கேசவ பெருமாள் என்ற ஆலயம் வழி வந்ததாக இருக்கலாம்! ( சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ).

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு நாதரின் பன்னிரு  சீடர்களில் ஒருவரான தோமையர் ( Saint Thomas ) கோழிகோடு வழியே வந்து பின்னர் சென்னையில் போதித்த வரலாறு உள்ளது. ( அன்னாரின் அடக்க ஸ்தலம் Saint Thomas Mount யில் உள்ளது  ). சமகாலத்திய திருவள்ளுவரின் தோற்ற ஸ்தலமான மைலாப்பூர் உள்ளது. மேலும் திருவள்ளுவரின் பழைய ஆலயம் ஒன்று இங்கு உள்ளது.


பூம்பாவை என்பவர் எழாம் நூற்றாண்டில் மயிலாப்பூரில் வாழ்ந்த பெண்ணாவார். இவர் பாம்பு தீண்டி இறந்து போக, இவரது சாம்பலிலிருந்து திருஞானசம்பந்தர் பதிகம் பாடி உயிர்ப்பித்தார். பூம்பாவை சந்நிதி மயிலாப்பூர் கபாலிசுவரர் சிவாலயத்தில் அமைந்துள்ளது. நெய்தல் நிலம் என்பது  ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன.ஐந்திணைக் கருப்பொருளைக் கூற வந்த இறையனாரின் அகப்பொருள் நூல் ' நெய்தல் திணைக்கு மரம் புன்னையும், ஞாலழும் கண்டலும் " என்று குறிப்பிடுகிறது. கபாலீச்சரம் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும்.


இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
(~ தகவல் விக்கிபீடியா.)


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் நூறு வெண்பாக்களை கொண்டுள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் பேயாழ்வார்.  இவரின் தோற்ற ஸ்தலம் மைலாப்பூர் .



பட்டினத்து அடிகள் வழிபட்ட திருஒற்றியூர் கோயில் மிக தொன்மையானது. இவரது காலம் கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகும்.

திரு அல்லி கேணி பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்று. இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது.



காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. இவரின் அடக்க ஸ்தலம் திருவலங்காட்டில் உள்ளது.



திருமுல்லை வாயில் திருக்கோயிலில் சோழமன்னர்களில், பரகேசரிவர்மன் உத்தமசோழன், முதலாம் இராசேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பாண்டியதேவன் காலத்திலும்; விசயநகர வேந்தர்களில் ஹரிஹரராயர் II, இரண்டாம் தேவராயருடைய தம்பி பிரதாப தேவராயர், வீரப்பிரதாபபுக்க ராயர், வீரப்பிரதாப மல்லிகார்ச்சுன தேவமகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, பார்த்திவேந்திரவர்மன் காலத்திலும் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு.

மழவரையர் மகளாரும், கண்டராதித்த பெருமாள் தேவி யாரும், ஆகிய செம்பியன்மாதேவியார், புழற்கோட்டத்து அம்பத்தூர் நாட்டு அம்பத்தூர் ஊராரிடமிருந்து நிலம் வாங்கி, இத் திருமுல்லை வாயில் கோயிலுக்கு உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆட்சி யாண்டில் கொடுத்துள்ளனர். மண்டபத்துத் தூணில் உள்ள முதலாம் இராசேந்திரசோழ தேவன் கல்வெட்டு, அந்த மண்டபம் கட்டப் பட்டதைக் குறிப்பிடுகின்றது.

இது போன்றே வியாசர்பாடி திருவான்மியூர் கோயம்பேடு போன்ற இடங்களின் செய்திகள் மிகவும் தொன்மையானது. பல்லவர்கள் கால சிற்பங்களும் கடல் கொண்ட ராயபுரம் விஸ்வநாதர் ஆலயமும் காலத்தை பறை சாற்றுபவை. பற்பல கடற்கோள்களால் ( சுனாமி ) இதன் வரலாறு கிடைக்கவில்லை. இதன் பாதிப்பை உணர்ந்த மன்னர்கள் தங்களின் தலைநகர்களை  இக்கரைகளை தவிர்த்தே அமைத்தனர்.

நெய்தல் நிலத்தை சார்ந்த மீனவ குடிகளே இதன் ஆதி மக்கள்! 
Download As PDF

No comments: